தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூலாதாரப் பணவீக்கம் நவம்பரில் 1.9%ஆக தொடர்ந்து சரிவு

2 mins read
e6796c6b-dc4d-4946-ae8f-46352d902c5e
சேவைப் பணவீக்கம் டிசம்பரில் இன்னும் மெதுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் நவம்பரில் தொடர்ந்து சரிந்து, மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.

தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளைச் சேர்க்காத மூலாதாரப் பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் 1.9 விழுக்காடாகக் குறைந்தது. அக்டோபரில் அது 2.1 விழுக்காடாக இருந்தது.

2021 டிசம்பருக்கு (2.1 விழுக்காடு) பிறகு இதுவே ஆகக் குறைவான மூலாதாரப் பணவீக்கம்.

ஒட்டுமொத்த பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் நவம்பரில் 1.6 விழுக்காடாக உயர்ந்தது. அக்டோபரில் அது 1.4 விழுக்காடாக இருந்தது. தனியார் போக்குவரத்து செலவுகள் இன்னும் படிப்படியாகக் குறைந்ததே இந்த லேசான உயர்வுக்குக் காரணம்.

மாத அடிப்படையில், மூலாதாரப் பணவீக்கத்திலும் ஒட்டுமொத்த பணவீக்கத்திலும் மாற்றம் எதுவுமில்லை.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் திங்கட்கிழமை (டிசம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

இறங்குமுகம் கண்டு வந்துள்ள சேவைப் பணவீக்கம், “2024ன் எஞ்சிய காலத்துக்கு இன்னும் மெதுவடைய வேண்டும்” என்று அவை கூறின.

மூலாதாரப் பணவீக்கம், ஆண்டிறுதியில் தொடர்ந்து 2 விழுக்காட்டுக்குக் குறைவாக இருக்கும் என ஆணையமும் அமைச்சும் எதிர்பார்க்கின்றன.

2024க்கான மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 2.5 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என முன்னுரைக்கப்படுவதாக அவை தெரிவித்தன. 2025ல் அது இன்னும் மெதுவடைந்து 1.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும்.

நவம்பரில் உணவு, சேவைப் பணவீக்கம் முறையே 2.4 விழுக்காடாகவும் 2.2 விழுக்காடாகவும் குறைந்தது. உணவுச் சேவை, விடுமுறைச் செலவுகள் மெதுவாக உயர்ந்ததும் தொலைத்தொடர்புச் சேவைக் கட்டணங்கள் கணிசமாகக் குறைந்ததும் இதற்குக் காரணம்.

வீட்டு வாடகை உயர்வு சிறிதாக இருந்ததால், தங்குமிடப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 2.4 விழுக்காடாகக் குறைந்தது.

கார் விலைக் குறைவு சிறிய அளவில் இருந்ததால், தனியார் போக்குவரத்துப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 0.7 விழுக்காடு குறைந்தது. அக்டோபரில் அது 2.5 விழுக்காடு குறைந்திருந்தது.

மின்சார, எரிவாயுப் பணவீக்கம் மாற்றமின்றி 2.5 விழுக்காடாக இருந்தது. சில்லறை விற்பனை, இதர பொருள்கள் பணவீக்கம் 0.1 விழுக்காடாக தொடர்ந்தது.

குறிப்புச் சொற்கள்