தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கைப் பதிவுக்கான ஆக அண்மைய கட்டமான ‘2சி’ கட்டத்தின்கீழ் மொத்தம் 81 தொடக்கப்பள்ளிகளில் குலுக்கல் நடைபெறும்.
மொத்தம் 84 பள்ளிகளில் உள்ள இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
பள்ளியில் உள்ள இடங்களுக்கான போட்டியின்படி, புக்கிட் பாத்தோக்கில் உள்ள பிரின்சஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளி முன்னிலையில் உள்ளது. இங்கு 41 இடங்களுக்கு 232 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, கிளமெண்டியில் உள்ள நன் ஹுவா தொடக்கப்பள்ளியில் 41 இடங்களுக்கு 166 பேரும் சுவா சூ காங்கில் உள்ள சவுத் வியூ தொடக்கப்பள்ளியில் 41 இடங்களுக்கு 155 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூலை 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முடிவடைந்த ‘2சி’ கட்டத்துக்கான ஆக அண்மைய பதிவு விவரங்களைக் கல்வி அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 6) தனது இணையத்தளத்தில் வெளியிட்டது. இந்தக் கட்டத்துக்கான முடிவுகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும்.
அடுத்த கட்டமான ‘2சி துணை’ கட்டத்துக்கான காலியிடங்களும் அதே நாளில் பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்படும். இது, 2025 தொடக்கநிலை 1 பதிவுக்கான கடைசிக் கட்டமாகும்.
‘2சி துணை’ கட்டத்துக்கான பதிவு, ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 19 மாலை 4.30 மணிக்கு நிறைவடையும். இந்தக் கட்டத்துக்கான முடிவுகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்படும்.
பள்ளியுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத பிள்ளைகளுக்கான ‘2சி’ கட்டத்தில் 52.5 விழுக்காட்டுப் பள்ளிகளில் குலுக்கல் நடைபெறாது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
2025ல் குலுக்கல் நடைபெறும் 81 பள்ளிகளில், 62 பள்ளிகளில் அந்தந்த பள்ளிக்கு 1 கி.மீ. தூரத்திற்குள் வசிக்கும் சிங்கப்பூர்க் குடிமக்களான பிள்ளைகளுக்கு குலுக்கல் நடைபெறும்.