கல்வி அமைச்சின் 57 பாலர் பள்ளிகளில் முதல்நிலைப் பதிவு அடுத்த மாதம் தொடக்கம்

கல்வி அமைச்சின் 57 பாலர் பள்ளிகளில் முதல்நிலைப் பதிவு அடுத்த மாதம் தொடக்கம்

2 mins read
b5563832-c08a-4c1a-ba22-aeca132efb1c
கல்வி அமைச்சின் பாலர் பள்ளியில் விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிள்ளைகள். - படம்: சாவ்பாவ்

கல்வி அமைச்சின் பாலர்பள்ளி முதல்நிலையில் அடுத்த ஆண்டு (2027) பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான பதிவு அடுத்த மாதம் (மார்ச்) 23ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 31ஆம் தேதிவரை அது நீடிக்கும்.

2022ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கும் இடையில் சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகளுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு அந்தப் பதிவு பொருந்தும்.

அமைச்சின் பாலர்பள்ளி இணையத்தளத்தில் பெற்றோர் அதற்குப் பதிந்துகொள்ளலாம். முடிவுகள் ஜூன் முதல் தேதி அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

பாலர்பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் சேர்வதற்கு அந்தப் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களைப் பொறுத்து அது அமையும்.

கல்வி அமைச்சின் 57 பாலர்பள்ளிகளில் முதல்நிலையில் கிட்டத்தட்ட 7,900 உள்ளன. அதாவது ஒரு நிலையத்திற்கு ஏறக்குறைய 140 இடங்கள் இருக்கும். எம்கே@ரிவர்வேல் பாலர்பள்ளிக்கும் அது பொருந்தும். அந்தப் பாலர்பள்ளி அடுத்த ஆண்டு திறக்கப்படவிருக்கிறது.

பாலர்பள்ளிகளின் திட்டங்கள் குறித்தும் அவற்றில் உள்ள வசதிகள் பற்றியும் அறிந்துகொள்ள அடுத்த மாதம் ஏழாம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை தனிப்பட்ட நிலையங்களுக்குச் சென்று விவரங்களைப் பெறலாம்.

கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளில் ஐந்து வயதும், ஆறு வயதுமுடைய பிள்ளைகள் பயிலலாம். தரமான, கட்டுப்படியான பாலர்பள்ளிக் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் அவை நிறுவப்பட்டன. குழந்தைப்பருவக் கல்வி நடைமுறைகளின் தரத்தை உயர்த்துவதற்காகவும் அவை அமைக்கப்பட்டன.

கல்வி அமைச்சைச் சேர்ந்த பாடத்திட்ட நிபுணர்கள், பாலர்பள்ளித் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அது கவனம் செலுத்துகிறது. பிள்ளைகளிடையே, சமூகத்தினருடன் பழகும் திறன்களை வளர்க்கவும் எண்ணிலும் எழுத்திலும் அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கவும் தொடக்கநிலை முதலாம் வகுப்புக்கு அவர்களைத் தயார்ப்படுத்தவும் திட்டம் முனையும்.

கல்வி அமைச்சு பாலர்பள்ளிகள் அனைத்திலுமே மாண்டரின், மலாய், தமிழ் என மூன்று தாய்மொழிப் பாடங்களும் வழங்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்திலேயே இருமொழித் திறனை ஊக்குவிக்கவும் மொழிக் கற்றலுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத்தரவும் அது உதவும் என்று அமைச்சு தெரிவித்தது.

பாலர்பள்ளிப் பராமரிப்பு எனும் முழுநேரப் பராமரிப்புச் சேவைகளையும் அவை வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்