தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கைப் பதிவு ஜூலை 1ல் தொடங்கும்

2 mins read
7ef7d144-ff8f-4ea4-8500-b3a3910eac39
தொடக்கப்பள்ளி 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைப்பதிவு நடவடிக்கை ஜூலை 1ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு 180 தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலானவை பல்வேறு கட்ட மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் முறையை நடத்தவில்லை என்று கல்வி அமைச்சு புதன்கிழமை (மே 14) தெரிவித்தது.

2025ஆம் ஆண்டில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் சேர போதுமான இடங்கள் இருப்பதாகவும் அது கூறியது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைப்பதிவு நடவடிக்கை ஜூலை 1ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதல் முறையாக தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் விவரங்களையும் அது வெளியிட்டுள்ளது.

உதாரணமாக, 78.9 விழுக்காடு பள்ளிகளில் ‘2ஏ’ கட்டத்துக்கு குலுக்கல் முறை தேவையிருக்காது.

இது, மாணவர் சேர்க்கை நடைமுறையில் இரண்டாவது கட்டமாகும். இந்தக் கட்டம், பெற்றோர், உடன்பிறந்தோர் முன்னாள் மாணவர்களாக இருந்தால் மற்றும் பெற்றோர் பள்ளி ஊழியராக அல்லது பள்ளி ஆலோசனை அல்லது நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருந்தால் அவர்களுடைய பிள்ளைகள் இப்பிரிவின்கீழ் சேர முடியும்.

தொடக்கப்பள்ளி வட்டாரத்திற்குள் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பாலர்பள்ளி மாணவர்களும் இப்பிரிவின்கீழ் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

முதல் கட்டம், தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவரின் உடன்பிறந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் அவசியமிருக்காது.

3வது கட்டமான ‘2பி’-யில் 83.3 விழுக்காடு பள்ளிகள் குலுக்கல் முறை வழியைப் பின்பற்றாது.

பள்ளியுடன் இதர வழிகளில் தொடர்புகொண்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு இப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, பள்ளியில் தொண்டூழியராக இருக்கும் பெற்றோர், தேவாலயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லது குலவழிச் சங்கங்களின்வழி பள்ளியுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இப்பிரிவில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

கட்டம் 2சியில் 51.1 விழுக்காடு பள்ளிகள் குலுக்கல் முறையை நடத்தாது. ஒட்டுமொத்தமாக அனைத்துக் கட்டங்களில் அதிக போட்டியுள்ளது கட்டம் 2சி. முதல் மூன்று கட்டங்களின்கீழ் பதிவுசெய்யாத பிள்ளைகள் கட்டம் ‘2சி’யின்போது விண்ணப்பம் செய்யலாம்.

அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் கட்டம் 2பி, கட்டம் 2சி ஆகியவற்றில் முறையே குறைந்தது இருபது முதல் 40 வரை ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் இருக்கும்.

கல்வி அமைச்சு, முதல் வகுப்புக்கான பதிவு தேதியுடன் 2026ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கான இந்த விவரங்களையும் வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்