டவுன்ஸ்வில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சிலர் கட்டுமானத் தளத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
மாணவர்களில் ஒருவர் புதன்கிழமை (நவம்பர் 18) ‘டிக்டாக்’ சமூக ஊடகத்தில் பதிவிட்ட காணொளியில், எட்டு மாணவர்கள் கொண்ட குழு ஒன்று கட்டுமானத் தளத்திற்குச் சென்று அங்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கு உணவு வழங்கியதைக் காண முடிந்தது.
அங் மோ கியோவில் பெருவிரைவு ரயிலுக்கான குறுக்குத் தீவு ரயில் பாதையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு $159 மதிப்புள்ள ‘விங்ஸ்டாப்’ உணவு பொட்டலங்களை அவர்கள் வழங்கியதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டது.
கட்டுமானத் தளத்தின் நுழைவாயிலில் அவர்களைச் சந்தித்த ஊழியர் ஒருவர், இந்த எதிர்பாராத செயலால் வியப்படைந்தார். எனினும், விரைவில் மாணவர்களுடன் இயல்பாகப் பழகிய அவர், ஒவ்வொருவருடனும் கைகுலுக்கித் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பின்னர், தங்களது பணி நிறைவடைந்த மகிழ்ச்சியுடன் மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
மாணவர்களின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்குப் பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்தன. பலரும் அவர்களின் அன்பைப் பாராட்டியதுடன், அதிகமான இளையர்கள் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.
நிலப் போக்குவரத்து ஆணையமும் அந்த டிக்டாக் காணொளியில் கருத்து பதிவிட்டு, அன்பைப் பரிமாறியதற்காக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தது. தங்களது பதிவுக்கு வந்த கருத்துகளுக்குப் பதிலளித்த மாணவர்கள், இதுபோன்ற நற்செயல்களைத் தொடர்ந்து செய்வோம் என உறுதியளித்தனர்.
