பாதுகாப்பு அரண்களுடன் தொடக்கப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுச் சோதனை

பாதுகாப்பு அரண்களுடன் தொடக்கப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவுச் சோதனை

2 mins read
a91469b0-bf3a-4aac-81d2-5e4ffdf2dc52
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தொடக்கநிலை 4லிருந்து செயற்கை நுண்ணறிவு படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

45 வயது ஆங்கில ஆசிரியை ஒருவர், தனது தொடக்கநிலை 5 மற்றும் 6ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் சிறந்த கட்டுரைகளை எழுத உதவுவதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறார்.

‘ஸ்கூல்ஏஐ’ எனப்படும் இந்தச் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கல்வித் தளம் அவரது மாணவர்களை வழிநடத்தும் திறன் கொண்டது. அவர்கள் கட்டுரையை எழுதத் தொடங்கும் முன்பே, கதாபாத்திரங்களின் சிக்கல்கள் மற்றும் கதையின் திருப்பங்கள் குறித்து ஆழமாக ஆராயும்போது ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை இது எழுப்புகிறது.

கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து கவனம் அதிகரித்து வரும் நிலையில், கற்றலுக்கு உதவ அவரைப் போன்ற சிங்கப்பூர் ஆசிரியர்கள் பல்வேறு செயற்கை நுண்ணறிவுக் கற்பித்தல் உதவியாளர்கள் அல்லது பிற கருவிகளைச் சோதித்து வருகின்றனர்.

இருப்பினும், தொடக்கப்பள்ளிகளில் இது ஒருவித நிச்சயமற்ற தன்மையைச் சந்தித்துள்ளது. ஏனெனில், சிறு வயதிலேயே இந்தக் கருவிகளை அறிமுகப்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இளம் குழந்தைகளின் பெற்றோர் எச்சரிக்கையாகவே உள்ளனர்.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தொடக்கநிலை 4லிருந்து செயற்கை நுண்ணறிவு படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியிருந்தார்.

ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்தரங்கில் பேசிய அவர், உன்னிப்பான மேற்பார்வை மற்றும் குறைந்த அளவிலான வெளிப்பாட்டின்கீழ் இது செய்யப்படுகிறது என்றும், அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே, கல்வி அமைச்சின் கல்வித் துறை தலைமை இயக்குநர் திருவாட்டி லியூ வெய் லீ, லிங்க்ட்இன் பதிவு ஒன்றில் பெற்றோரின் கவலைகள் குறித்து பேசினார். இதற்கான பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார்.

பள்ளிகளில் பயன்படுத்த கல்வி அமைச்சால் உருவாக்கப்பட்ட இணையக் கற்றல் தளமான சிங்கப்பூர் மாணவர் கற்றல் தளத்தில், இந்த வயதுப் பிரிவினருக்கு ஆசிரியரின் மேற்பார்வையுடன் மட்டுமே, கற்றல் பணிகளுக்கான குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்ட சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பள்ளிகள் பயன்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை எதேச்சையான போக்கிற்கும், திறந்த இணையத்திற்கும் விட்டுவிடுவதைவிட மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவைச் சிறப்பாகப் பயன்படுத்த பள்ளிகள் கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்