வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), புதிய வகைப்பாட்டு முறையின்கீழ் 8,573 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை (பிடிஓ) புதன்கிழமை (அக்டோபர் 16) விற்பனைக்கு விட்டுள்ளது.
இப்புதிய ‘பிளஸ்’, ‘பிரைம்’ வகை வீடுகளுக்கு 6 முதல் 9 விழுக்காடு வரை மானியத்தைத் திரும்பப் பெறும் நிபந்தனை பொருந்தும் என வீவக தெரிவித்தது.
நகர மையத்திற்கு அருகாமை, போக்குவரத்து இணைப்பு, வசதிகள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் ஸ்டாண்டர்ட், பிளஸ், பிரைம் பிரிவுகளின்கீழ் பிடிஓ திட்டங்கள் வகைப்படுத்தப்படும். முதிர்ச்சியடைந்தவை அல்லது முதிர்ச்சியடையாதவை எனக் குடியிருப்புப் பேட்டைகளை வரையறுக்கும் முறைக்குப் பதிலாக இப்புதிய முறை நடப்புக்கு வந்துள்ளது.
விரும்பத்தக்க இடங்களில் அமையும் பிளஸ், பிரைம் வீடுகளை கட்டுப்படியான விலையில் வைத்திருக்க அவற்றுக்குக் கணிசமான அளவு கூடுதல் மானியங்கள் வழங்கப்படுவதாக வீவக கூறியது.
முதன்மை, மத்திய வட்டாரங்களில் வீடு உடையோர், அவற்றை மறுவிற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தைக் கட்டுப்படுத்த மானியத்தைத் திரும்பப் பெறும் நிபந்தனை தேவைப்படுவதாக வீவக விளக்கியது.
“கூடுதல் மானியங்களைப் பெறாத மற்ற பிடிஓ வீடு வாங்குவோருடன் சமத்துவத்தைக் கட்டிக்காக்க பிளஸ், பிரைம் வீட்டு உரிமையாளர்கள், 10 ஆண்டுகால குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தைப் பூர்த்திசெய்த பிறகு, அந்த வீட்டை விற்றவுடன் அதன் மறுவிற்பனை விலை அல்லது விலைமதிப்பில் (இவற்றில் எது அதிகமோ) ஒரு விகிதத்தை வீவகவிடம் திரும்பச் செலுத்த வேண்டும்,” என்று புதன்கிழமை வீவக தெரிவித்தது.
ஸ்டாண்டர்ட், பிளஸ் பிரிவுகளில் தலா ஏழு வீட்டுத் திட்டங்களின்கீழ் 4,988 ஸ்டாண்டர்ட் வீடுகளும் 3,273 பிளஸ் வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
காலாங்/வாம்போவில் உள்ள ஒரேயொரு பிரைம் திட்டத்தின்கீழ் (கிராவ்ஃபர்ட் ஹைட்ஸ்) 312 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிரைம் திட்டத்துக்கு மானியத்தைத் திரும்பப் பெறும் விகிதம் 9 விழுக்காடாகவும் ஏழு பிளஸ் திட்டங்களுக்கு அது 6 முதல் 8 விழுக்காடு வரையிலும் உள்ளது.
பிரைம், பிளஸ் வகை வீடுகளுக்கு 10 ஆண்டுகால குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் போன்ற கடுமையான மறுவிற்பனை நிபந்தனைகள் பொருந்தும். எதிர்காலத்தில் அவை மறுவிற்பனைச் சந்தையில் விற்பனைக்கு விடப்படும்போது, அவற்றை வாங்குவோர் $14,000 குடும்ப வருமான வரம்பைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
ஸ்டாண்டர்ட் வீடுகள் மறுவிற்பனை செய்யப்படும்போது மானியத்தைத் திரும்பப் பெறும் நிபந்தனை இருக்காது. அவற்றுக்கான குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் ஐந்து ஆண்டுகள்.
‘கிராவ்ஃபர்ட் ஹைட்ஸ்’ பிரைம் திட்டத்தில், மூவறை வீட்டு விலை $390,000க்கும் $523,000க்கும் நாலறை வீட்டு விலை $568,000க்கும் $759,000க்கும் இடைப்பட்டிருக்கும் (மானியங்களைச் சேர்க்காமல்). புதன்கிழமை அறிமுகம் கண்ட விற்பனைத் திட்டத்தில் ஆக விலையுயர்ந்த வீடுகள் இவையே.
அல்ஜுனிட் சாலை அருகே மாத்தார் எம்ஆர்டி நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள ‘மெர்பாத்தி அல்கோவ்’ பிளஸ் திட்டத்துக்கான மானியத்தைத் திரும்பப் பெறும் விகிதம் 8 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், நாலறை வீட்டு விலை $530,000க்கும் $647,000க்கும் இடைப்பட்டிருக்கும் (மானியங்களைச் சேர்க்காமல்).
பிடோக்கில், ‘பேஷோர் விஸ்தா’, ‘பேஷோர் பால்ம்ஸ்’ வீட்டுத் திட்டங்களுக்கான மானியத்தைத் திரும்பப் பெறும் விகிதம் 7 விழுக்காடாக உள்ளது. அத்திட்டங்களின்கீழ், நாலறை வீட்டு விலை $495,000க்கும் $694,000க்கும் இடைப்பட்டிருக்கும்.
இதற்கிடையே, ‘கெம்பாங்கான் வேவ்’ திட்டத்துக்கான நாலறை வீட்டு விலை $453,000க்கும் $592,000க்கும் இடைப்பட்டிருக்கும். அவற்றுக்கான மானியத்தைத் திரும்பப் பெறும் விகிதம் 6 விழுக்காடாக உள்ளது.

