இணையத்தில் மின்னிலக்க நாணயம், மற்ற பொருள்களை விற்போர் தங்கள் விற்பனை விளம்பரங்களில் பிரதமரின் படத்தை இணைத்திருப்பது தெரிந்தால் அவை மோசடி விளம்பரங்கள், அவற்றை நம்ப வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மோசடிக்காரர்கள் தமது போலியான அல்லது மற்ற படங்களைப் பயன்படுத்தி இணையத்தில் தங்கள் பொருள்கள், சேவையை விற்க முற்படுவது குறித்து பொதுமக்களைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) எச்சரித்தார்.
மோசடிக்காரர்கள் தங்கள் விளம்பரங்களில் மின்னிலக்க நாணயம், எளிதில் பணம் பெறக்கூடிய திட்டம், நிரந்தரவாசத் தகுதி பெற்றுத் தருவது போன்ற சேவையை வழங்குவதாக விளம்பரம் செய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“இது பற்றி சிலர் எனக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர். அத்துடன், எனக்கு வரும் பதிவுகளின் வாயிலாகவும் நான் இதை அறிகிறேன்,” என்று பிரதமர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்ட பிரதமர், இதுபோன்ற மோசடிகளில் வீழ்ந்து தங்கள் தனிப்பட்ட விவரங்களை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டினார். அத்துடன், இவை குறித்து ஸ்கேம்ஷீல்ட் (ScamShield) செயலி வழி புகாரளிக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.
மோசடிக்காரர்களின் வலையில் சிக்கியோர் அதுபற்றி காவல்துறையிடம் புகாரளிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.