மலாய் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களின் விருப்பங்களை ஆதரிக்கவும் அவர்களுடன் தமது அரசு நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களின் நலனை மேம்படுத்துவதற்காகப் பேராசிரியர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிமை முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக, பள்ளிவாசல் தலைவர்கள், குடும்பங்களுடன் இணைந்து மலாய் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் புதிய தலைமுறை மலாய்/முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
சமூகத்தின் பல்வேறு பின்னணியைக் கொண்ட மலாய்/ முஸ்லிம் பெண்களைத் தாம் சந்தித்ததாகக் கூறிய பிரதமர், அவர்களுடன் பராமரிப்பு, சமூக ஒருங்கிணைப்பு, சமூகத்தில் பெண்களின் பங்கை எவ்வாறு வலுப்படுத்துவது போன்றவை குறித்துக் கலந்துரையாடியதாகவும் சொன்னார்.
சிங்கப்பூர்ச் சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் நேர்மையான கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும் சிங்கப்பூரில் மலாய்/முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அவர்கள் பாடுபடுவதைக் கண்டு பெருமைப்படுவதாகவும் பிரதமர் வோங் புகழாரம் சூட்டினார்.