தமக்குக் கிடைக்கும் சம்பள உயர்வை முழுவதையும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நற்பணிகளுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
‘எம்ஆர்4’ அமைச்சருக்கான சம்பள அளவீட்டுக் குறியீட்டைப்போல பிரதமருக்கு இரு மடங்கு சம்பளம் வழங்கப்படும்.
இந்நிலையில், இந்தச் சம்பளச் சீரமைப்பால் தமக்குக் கிடைக்கும் கூடுதல் தொகையைத் தகுந்த நற்பணிகளுக்கு வழங்க முடிவுசெய்துள்ளதாகத் திரு வோங் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், இது தமது சொந்த முடிவு என்றும் மற்ற அமைச்சர்களோ அதிகாரிகளோ அதனைப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நன்கொடைகளைப் பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதில் தமக்கு விருப்பமில்லை என்று கூறிய பிரதமர், அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு சார்ந்த முடிவுகளுக்குத் தாமே இறுதிப் பொறுப்பேற்பதாகவும் கூறினார்.
நாட்டின் நலன் கருதியே இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைச் சிங்கப்பூரர்கள் உணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


