வசதி குறைந்த இளையர்களுக்கு உதவும் புதிய அறப்பணி முயற்சிக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் தனது கையெழுத்திட்ட கிட்டாரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
‘கிஃப்ட் ஏ கிட்டார்’ எனும் அந்த முயற்சியால் 13 முதல் 19 வயது வரையிலான ஏறக்குறைய 600 பதின்ம வயதினர் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஜூலையிலிருந்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாப நோக்கற்ற அமைப்பான த ரைஸ் கம்பெனியுடன் இணைந்து உள்ளூர் அறப்பணி அமைப்பான த மியூசிக் சொசைட்டி ‘கிஃப்ட் ஏ கிட்டார்’ திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. 2025ஆம் ஆண்டில் தேசத்தின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த உதவி திட்டம் இடம்பெறுகிறது.
சிங்கப்பூர் இளையர்களின் இசைத் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்குத் தேவையான இசைக் கருவிகளை வழங்கி அவர்களுடைய இசை ஆர்வத்தை பூர்த்தி செய்வது திட்டத்தின் நோக்கமாகும்.
‘கிஃப்ட் ஏ கிட்டார்’ அறப்பணிக்கு நிதித் திரட்ட உள்ளூர், வட்டார முக்கிய பிரமுகர்கள், கலைஞர்களிடமிருந்து 60 கிட்டார்கள் திரட்டப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் கிட்டார்கள் ஏலத்தில் விடப்படும். பிரதமர் லாரன்ஸ் வோங் கையெழுத்திட்ட கிட்டாரும் அவற்றில் ஒன்று
இசை மீது ஆர்வம் கொண்ட பிரதமர் வோங், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கிட்டார் வாசித்து வருகிறார். சிறுவயதில் அவரது தந்தை கிட்டாரை பரிசாக அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு கிட்டார் மீது ஆர்வம் பிறந்தது.

