பிரதமர் லாரன்ஸ் வோங் இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக வியட்னாம் தலைநகர் ஹனோய்க்குச் செல்கிறார்.
செவ்வாய்க்கிழமையும் (மார்ச் 25) புதன்கிழமையும் (மார்ச் 26) ஹனோயில் பிரதமர் வோங் வியட்னாமியத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவார்.
வியட்னாமியப் பிரதமர் பாம் மின் சின்னின் அழைப்பை ஏற்று அறிமுகப் பயணமாக பிரதமர் வோங் அங்குச் செல்வதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்தாவதைத் தலைவர்கள் பார்வையிடுவர்.
மின்னிலக்கப் பொருளியல், எல்லை தாண்டிய மின்சார வர்த்தகம், நீடித்த உள்கட்டமைப்புக் கூட்டுறவு போன்ற பல அம்சங்களில் சிங்கப்பூரும் வியட்னாமும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிகூறியிருந்தன.
நிதியமைச்சருமான பிரதமர் வோங்கிற்கு வியட்னாமின் அதிபர் மாளிகையில் சிறப்பு விருந்தும் அளிக்கப்படும்.
அவர் அதிபர் லுவோங் சுவோங்கையும் சந்திக்கவிருக்கிறார்.
பிரதமர் வோங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மனிதவள, வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் ஆகியோரும் வியட்னாம் செல்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் வோங் வியட்னாம் செல்வதால் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.