தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் துணிச்சலாக முடிவெடுப்பது வாக்காளர்களின் கையில்: பால் தம்பையா

3 mins read
1286cb73-cab0-4440-b4be-a9f64906cb8f
சுவா சூ காங் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) நடந்த சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் டாக்டர் பால் தம்பையா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

பொருளியலைப் பொறுத்தவரைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நிபுணர். அவர் விரும்பத்தக்க மனிதர். ஆனால், இப்போது சிங்கப்பூருக்குத் தேவைப்படுவது துணிச்சலான மாற்றங்களை எடுக்கத் தயாராக இருப்பவர்தான் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் பால் தம்பையா தெரிவித்துள்ளார்.

“2010ல் பொருளியல் நல்ல நிலையில் இருந்தது. பொருளியல் வளர்ச்சி 14.8%ஆக இருந்தது. சிங்கப்பூர் அப்போதுதான் மிகுந்த நிதி நெருக்கடியிலிருந்து மீண்டுவந்திருந்தது. வேலையின்மை விகிதம் குறைவாக இருந்தது.

“எனினும், உண்மையில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவில்லை. பெருவிரைவு ரயில் சேவையில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டது. மருத்துவச் செலவுகள் கட்டுப்படியாகாத நிலையில் இருந்தன. அதனையடுத்து, 2011ல் நடந்த பொதுத் தேர்தலில் மசெக வென்றபோதும், சிங்கப்பூர் வாக்காளர்கள் அக்கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவை வழங்கினர்.

“அதன் பிறகே மசெக வீடு, போக்குவரத்தில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது,” என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 24) சுவா சூ காங் விளையாட்டரங்கத்தில் நடந்த சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் டாக்டர் பால் தம்பையா பேசினார்.

“பணக்காரர்கள் தங்கள் வருமானத்தில் குறைந்த விழுக்காட்டையே ஜிஎஸ்டி வரியாகக் கட்டுகின்றனர். அதே ஜிஎஸ்டி, குறைந்த வருமானத்தினரின் வருமானத்தில் அதிக விழுக்காட்டை உள்ளடக்குகிறது,” என்றார் அவர்.

“கொவிட்-19 பரவலின்போது சிங்கப்பூரர்கள் நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையிலும் அதன்பின் மசெக அரசாங்கம் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்திவிட்டது. சென்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு ஜிஎஸ்டியை ஓராண்டுக்கு அகற்றவும் ஜிஎஸ்டி உயர்வைத் தாமதப்படுத்தவும் கூறினோம். ஆனால், பிரதமர் வோங் அதனை 9 விழுக்காட்டிற்கு உயர்த்திவிட்டார்,” என குறைகூறினார் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான்.

“அரசாங்கம் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் மொத்தம் 18% தண்ணீர் விலையை ஏற்றியுள்ளது. 2024 டிசம்பரில் பேருந்து, ரயில் கட்டணம் 6% உயர்த்தப்பட்டது. எரிசக்தி, எரிவாயு விலைகள் அதிகரித்துவிட்டன. இதுபோன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன.

“தேவையற்ற செலவுகளால்தான் ஜிஎஸ்டி உயரும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கே சொல்லியுள்ளார். மரினா அணைக்கட்டுப் பகுதியில் ‘நிறுவியோர் நினைவகம்’ அமைப்பதற்கான செலவு $335 மில்லியன். அதனால் மக்களுக்கான பயன் குறைவு. ‘எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்’டுக்கு அரசு பேரளவில் நிதியாதரவு வழங்கியது. ‘சிம்ப்ளிகோ’ திட்டத்தில் பணத்தை வீணாக்கியது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மின்தூக்கிகளுக்கு அருகில் மின்னிலக்கத் திரைகளை அறிமுகப்படுத்தியதிலும் தேவையற்ற செலவைச் செய்தது,” என்று டாக்டர் சீ சூன் ஜுவான் சாடினார்.

மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி போட்டியிடும் சிஜகவின் ஆக இளைய வேட்பாளரான அரிஃபின் ‌‌‌ஷா, 27, பாரதியாரின் கவிதையைப் பாடி உணர்ச்சிமிகுந்த உரையை ஆற்றினார்.

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என அனைத்து இனத்தவரும் பாரதியாரின் எழுச்சிவரிகளை முழங்க, சுவா சூ காங் விளையாட்டரங்கத்தில் இதுவரை காணாத காட்சியைக் காணமுடிந்தது.

“மார்சிலிங்கில் நாம் ஏன் போட்டியிடுகிறோம்? வரலாற்றில் பெரும்பாலும் பிரதமர் நிற்கும் தொகுதியில் மசெகதான் வெல்லும். ஆனால், அது எந்த வாக்கு வித்தியாசத்தில் வெல்கிறது என்பதும் முக்கியம். அந்த வித்தியாசம் குறைந்தால் அரசாங்கம் இன்னும் கூடுதலாக மக்கள் நலனுக்காகப் பாடுபடும்,” என்றார் அரிஃபின்.

விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச வருமானம், அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாமல் பற்றுச்சீட்டுகளை வழங்குவது என பல வி‌‌ஷயங்கள் குறித்தும் அவர்கள் பேசினர்.

குறிப்புச் சொற்கள்