இக்கட்டான உலக சூழலில் பொதுத் தேர்தலை அறிவித்தார் பிரதமர் வோங்

1 mins read
2e831f58-4e33-40ff-982b-a00e91bb0ad3
இக்கட்டான சூழலில் நாட்டை வழிநடத்தும் அணியைச் சிங்கப்பூரர்கள்தான் முடிவுசெய்யவேண்டும் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகம் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டு வருவதோடு இன்னும் நிச்சயமற்ற சூழலில் இருப்பதால் இத்தகைய சமயத்தில் பொதுத் தேர்தலை அறிவித்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இதுபோன்ற தருணத்தில் எந்த அணி நாட்டை வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதைச் சிங்கப்பூரர்கள் முடிவு செய்யவேண்டும் என்றார் அவர்.

“கடந்த பல ஆண்டுகளில் சிங்கப்பூரின் வெற்றிக்கு வகைசெய்த அனைத்துலக சூழல்கள் இனி இல்லாமல் போகக்கூடும்,” என்று பிரதமர் வோங் (ஏப்ரல் 15) தமது சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டார்.

எனவேதான் தாம் பொதுத் தேர்தலை அறிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான அணி எது என்பதை சிங்கப்பூரர்கள்தான் முடிவுசெய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் ஆணையை வெளியிடும்படி அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் அறிவுறுத்தியதை அடுத்து பிரதமர் வோங்கின் பதிவு வெளிவந்தது.

இம்மாதம் 23ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தினம். அதையடுத்து மே 3ஆம் தேதி சிங்கப்பூரர்கள் வாக்களிப்பர்.

ஆளும் கட்சியைத் தேர்தலில் வழிநடத்தும் பிரதமர் வோங் சிங்கப்பூரர்களின் மக்கள் செயல் கட்சியின் கொள்கைகளை முன்வைப்பார் என்று தெரிவித்தார். சிரமமான காலக்கட்டங்களில் மக்களுக்குச் சிறந்ததைச் செய்ய தமக்கும் தமது அணிக்கும் சிங்கப்பூரர்கள் வாய்ப்பளிப்பர் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடரும் வேளையில் பொதுத் தேர்தல் 2025 வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்