பொதுத் தேர்தல் பிரசாரம் கடைசிக் கட்டத்தை நெருங்கும் நிலையில் பிரதமர் லாரன்ஸ் வோங் மூன்று அம்சங்களைக் கருத்தில் கொள்ளும்படி வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 30ஆம் தேதி மாலை ‘தெம்பனிஸ் கிரீன்கோர்ட்’ வளாகத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்தபின் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார் பிரதமர்.
“ஒன்று, இந்தத் தேர்தல் உங்கள், உங்கள் குடும்பங்கள், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியது. வெகுவாக மாறியுள்ள உலகில் நாம் வளரும், முக்கியச் சவால்களைச் சந்தித்துவருகிறோம்,” என்றார் பிரதமர் வோங்.
இரண்டாவதாக, இந்தப் பொதுத் தேர்தல் சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியது என்றார் அவர்.
“அதாவது, குடியிருப்பாளர்களைத் தம் தொகுதிகளிலும் நாடாளுமன்றத்திலும் பிரதி நிதிக்கக்கூடிய நேர்மையான, நம்பிக்கையான, நல்ல குணம் படைத்தவர்களைத் தேர்ந்தெடுப்பது,” என்றார் பிரதமர்.
“மூன்றாவதாக, இந்தப் பொதுத் தேர்தல் நம் கொள்கைகள் பற்றியது. நாம் நமக்கென எத்தகைய சமூகத்தை உருவாக்க விரும்புகிறோம் என்பது பற்றியது - குறிப்பாக, பல இன, பல சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது தொடர்பானது,” என்றார் அவர்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஏப்ரல் 29ஆம் தேதி தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கு வருகையளித்ததும் தமது வருகையும் மசெக தேர்தலையும் தொகுதிகளையும் முக்கியமாகக் கருதுகிறது என்பதைச் சுட்டுவதாகப் பிரதமர் கூறினார்.
மசெகவின் மரபணு அனைவரையும் ஒன்றிணைப்பதே: பிரதமர் வோங்
மக்கள் செயல் கட்சியின் மரபணுவில் எதிர்மறையான அரசியல் உள்ளது என்றும் எதிர்க்கட்சியினரால் சமூக மன்றங்களை உணவு விநியோக நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை, குடியுரிமை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை என்றும் பாட்டாளிக் கட்சியின் பிரித்தம் சிங் ஏப்ரல் 29ஆம் தேதி குறைகூறியதற்கும் பிரதமர் வோங் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பாட்டாளிக் கட்சி சுட்டிய விஷயங்களை நான் எதிர்மறை அரசியலாகப் பார்க்கவில்லை. அவை கொள்கைகள் சார்ந்தவை. கொள்கைகள் குறித்த கருத்துகளில் என்றுமே வேற்றுமைகள் இருக்கும். அவற்றைப் பற்றி நாம் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம். அவற்றை எப்பொழுதுமே மேம்படுத்த இடம் உண்டு,” என்றார் அவர்.
நகர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தொகுதிகளுக்குக் கடைசி முன்னுரிமை கொடுக்கப்பட்டதைப் பற்றியும் அவர் கருத்துரைத்தார்.
“அவற்றை மேம்படுத்துவோம் என்பது எப்பொழுதும் நிச்சயமானதாகவே இருந்தது. எப்போது மேம்படுத்துவோம் என்பதுதான் கேள்வியாக இருந்தது.
“மசெகவை ஆதரித்த தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முன்பு ஒரு கருத்து இருந்தது. ஆனால் அத்தகைய கருத்து இன்று செல்லாது. எதிர்க்கட்சி அதற்கு எதிராகக் கருத்துரைக்கிறதா என்பது மட்டும் காரணமன்று, சிங்கப்பூரர்களே இன்னும் இதற்கு இன்னும் சிறப்பான வழி இருக்கும் எனக் கூறியிருந்தார்கள். அதனால்தான், சிங்கப்பூரர்களுக்குச் செவிசாய்த்து நாங்கள் கொள்கைகளை என்றும் மேம்படுத்துவோம் எனக் கூறுகிறேன்,” என்றார் பிரதமர்.
“மக்கள் கழகத்தின் பணி கட்சி சார்பற்றது; சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் அமைப்பு என நாங்கள் என்றும் கூறியுள்ளோம். இதுகுறித்து விவாதிக்கவும், தேவைப்பட்டால் மாற்றங்களை ஏற்படுத்தவும் தயாராக உள்ளோம்,” என்று திரு வோங் கூறினார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம், தலையங்கி அணிவது போன்ற கடினமான விவகாரங்கள் தொடர்பிலும் சிங்கப்பூரர்களை ஒன்றிணைப்பதே அரசாங்கக் கொள்கைளின் நோக்கம் என்றார் அவர். “இதுவே மசெகவின் மரபணு,” என்றார் பிரதமர்.
தொகுதி மேம்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உழைப்பு முக்கியம்: பிரதமர் வோங்
மசெக தொகுதியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சித் தொகுதியாக இருந்தாலும் சரி, வளங்களும் மேம்பாட்டுத் திட்டங்களும் நாடு முழுவதும் ஒதுக்கப்படுகின்றன என்று பிரதமர் வோங் கூறினார்.
“தொகுதியைப் பிரதிநிதிப்பவர் மாற்றம் ஏற்படுத்துவதில்லை என அர்த்தமாகுமா? அரசாங்கத்தின் வள ஒதுக்கீடு வெறும் அடிப்படை அளவுதான். அதற்கும் அப்பால் தொகுதியின் வளர்ச்சி, அதன் அணிகளின் தரம், அவர்களின் புத்தாக்கத் தீர்வுகள், குடியிருப்பாளர்களுக்காக அவர்கள் எவ்வளவு குரல்கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது,” என்றார் பிரதமர் வோங். அதற்குத் தெம்பனிஸ் தொகுதியின் வளர்ச்சியையும் அவர் எடுத்துக்காட்டாகச் சுட்டினார்.
“பல்லாண்டுகளாக இங்குப் பணியாற்றிய மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உழைப்பால்தான் இன்று தெம்பனிஸ் துடிப்பான வட்டாரமாக, கிழக்குப் பகுதியின் மையமாகத் திகழ்கிறது,” என அவர் புகழ்ந்தார்.