அரசாங்கத்துக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பிரதமர் வோங் உறுதி

அரசாங்கத்துக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பிரதமர் வோங் உறுதி

2 mins read
fdf4f85c-b6ef-41c1-a353-457fa9e9f6d0
சாங்கி விமான நிலையத்தின் சாங்கி ஜூவலில் ரீச் அமைப்பின் 40ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் வோங் - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லாரன்ஸ் வோங் பலதரப்பட்ட கண்ணோட்டங்களும் கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும் இன்னும் திறந்த, பங்களிப்புடன் உள்ள சமூகம் சிங்கப்பூரை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

நாட்டுக்கான தீர்வுகளைக் கண்டறிவதில் சிங்கப்பூரர்கள் இன்னும் அதிகம் பங்களிக்கவேண்டும் என்று அழைப்புவிடுத்த அவர், அதன் மூலம் நாட்டுப்பற்றும் பொறுப்பும் மக்களுக்கு உண்டாகும் என்றார். அது சமூக பிணைப்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் வோங் கூறினார்.

சிங்கப்பூரர்கள் முன்வைத்த யோசனைகள், முக்கிய கொள்கைகளிலும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்திலும் கடந்த சில ஆண்டுகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தது என்றார் பிரதமர் வோங்.

அரசாங்கம் அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்காவிட்டாலும் மக்களின் கருத்துகளுக்குச் செவி சாய்த்தது என்றார் அவர். “அரசாங்கம் தலைமைத்துவத்தை வழங்குவதோடு பாதையையும் வகுக்கும். ஆனால், அதனால் தனித்து செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது,” என்று திரு வோங் வலியுறுத்தினார்.

ஒரு பிரதமராக அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்த தாம் உறுதிகொண்டிருப்பதாக பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

சாங்கி விமான நிலையத்தின் சாங்கி ஜூவலில் ரீச் அமைப்பின் 40ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் வோங் உரையாற்றினார்.

ரீச் அமைப்பு கடந்த ஆண்டுகளில் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பகிர்ந்த திரு வோங், சிங்கப்பூரர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வலுவான பங்காளித்துவத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை அது வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

வர்த்தக, தொழில் அமைச்சில் அரசாங்க ஊழியராக இருந்தபோது அரசாங்க அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள், கல்வியாளர்கள், தனியார் துறை நிபுணர்கள் ஆகியோர் எப்படி கலந்துரையாடல்களில் ஒன்றிணைக்கப்படுகின்றனர் என்பதைத் தாம் நேரடியாகப் பார்த்துள்ளதைத் திரு வோங் நினைவுகூர்ந்தார்.

அத்தகைய துடிப்பான கலந்துரையாடல்களும் முடிவுகளும் சிங்கப்பூரின் பொருளியல் உத்திகளை இன்னும் கூர்மையாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதுபோன்ற கலந்துரையாடல்கள்வழி சிங்கப்பூரர்கள் கொள்கைகளில் நேரடியாக மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய யோசனைகளை முன்வைத்துள்ளனர் என்றார் அவர்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான புதிய வழிகாட்டிகள், கூடுதல் பெற்றோர் விடுப்பு, 1973ஆம் ஆண்டும் அதற்கும் முன் பிறந்தோருக்கான மாஜுலா தொகுப்புத் திட்டம் ஆகிய சில கொள்களைகளை பிரதமர் வோங் பட்டியலிட்டார்.

அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஏன் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் விளக்கம் தரும் என்றும் திரு வோங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்