தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் வோங்கிற்குக் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி

1 mins read
முதல் முறையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்
80ec6e4b-fdd5-43f4-a11f-eded12bfb576
முதலில் சளிக்காய்ச்சல் என்று கருதியதாகவும் பின்னர் உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு கொவிட்-19க்கான பரிசோதனையை மேற்கொண்டதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு டிசம்பர் 3ஆம் தேதி, கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவருக்கு இந்தக் கிருமி தொற்றியிருப்பது இதுவே முதல் முறை.

மாலை 6.52க்கு ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் திரு வோங் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

காலை எழுந்தபோதே தொண்டை வலி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதையும் அவர் சுட்டினார்.

முதலில் சாதாரண சளிக்காய்ச்சல் என்று நினைத்ததாகக் கூறிய பிரதமர், பின்னர் உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சோதனையை மேற்கொண்டதாகச் சொன்னார்.

“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசியில் நானும் கொவிட் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளேன்,” என்று அவர் தமது பதிவில் கூறினார்.

பொதுவாக நலமாக உணர்வதாகக் கூறிய திரு வோங், தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு, வீட்டிலிருந்தே பணியாற்றவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 18ஆம் தேதி அவருக்கு 52 வயது நிறைவடையும்.

விடுமுறைக் காலத்தில் சிங்கப்பூரர்கள் பலரும் பயணம் செய்யக்கூடும் என்பதால், சளிக்காய்ச்சல் உட்பட கிருமித்தொற்றுக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும்படி அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

உடல் நலமில்லாததுபோல் உணர்ந்தால் முகக்கவசம் அணியவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.

திரு வோங், கிருமிப்பரவலின்போது கொவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவிற்கு இணைத் தலைவராகப் பணியாற்றினார்.

குறிப்புச் சொற்கள்