தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எகிப்து, வியட்னாம் தலைவர்களுடன் பிரதமர் வோங் சந்திப்பு

1 mins read
f4d0c63e-88c3-4165-9fe2-b6bd71a3d2c8
ஜி20 உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு, நவம்பர் 19ஆம் தேதி, செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டின் நிறைவில் பிரதமர் லாரன்ஸ் வோங், எகிப்து, வியட்னாம் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.

சிங்கப்பூருக்கும் அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அணுக்கமான, வலுவான உறவுகள் குறித்துத் தமது சமூக ஊடகப் பதிவுகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தும் சிங்கப்பூரும் சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளன என்று எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டாஹ் அல்-சிசியுடனான சந்திப்புக்குப் பிறகு திரு வோங் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் சமய போதகர்களில் பலர் எகிப்தின் அல்-அஸார் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் என்பதை அவர் சுட்டினார். சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரியின் உருவாக்கத்தில் அல்-அஸார் பல்கலைக்கழகத்தின் ஆதரவுக்கு அவர் நன்றி கூறினார்.

காஸாவுக்கான சிங்கப்பூரின் நிவாரண உதவியை அங்குக் கொண்டுசேர்ப்பதில் அதிபர் அல்-சிசியின் உதவிக்குத் திரு வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வியட்னாமியப் பிரதமர் ஃபாம் மின் சின்னுடன் நடத்திய சந்திப்பு குறித்தும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு (2025) வியட்னாமுக்குப் பயணம் மேற்கொள்ள ஆவலாக இருப்பதாக அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவான உத்தேச பங்காளித்துவம் என்ற நிலைக்கு மேம்படுத்துவதன் தொடர்பில் இருதரப்பும் இணைந்து பணியாற்றுவதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்