கனடிய பிரதமருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய பிரதமர் வோங்

2 mins read
0afef6d9-a46b-4d76-afee-87ff97b454fc
ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திரு மார்க் கார்னியின் தொழிற்கட்சி வெற்றி பெற்றது. - படம்: ஏஎஃப்பி

2025 தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் லாரன்ஸ் வோங், கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இந்த மாற்றத்தின் காலகட்டத்தில் தங்களை வழிநடத்த கனேடிய மக்கள் உங்கள் மீதும் தொழிற் கட்சி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். உங்கள் ஆழ்ந்த அனுபவமும் நிலையான தலைமையும் கனடாவை வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும்போது உங்களுக்கு நன்றாக வழிகாட்டுதலாகப் பயன்படும்,” என்று பிரதமர் வோங் மே 6ஆம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, மார்ச் 14ஆம் தேதி அன்று திரு கார்னி பிரதமராகப் பதவியேற்றார்.

ஏப்ரல் 28 அன்று ஒரு தேர்தல் நடைபெற்றது. அதில் திரு கார்னி தனது தொழிற் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதன் விளைவாக, அவரது கட்சிக்கு நான்காவது முறையாக அரசு அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சிங்கப்பூரும் கனடாவும் கொண்டுள்ள நெருக்கமான, நீண்டகால பங்காளித்துவத்தையும் 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளையும் சுட்டிக்காட்டிய பிரதமர் வோங், “இருநாடுகளுக்கிடையே ஆன உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை நடவடிக்கை, மக்களிடையேயான நட்புணர்வு போன்ற பரந்த அம்சங்களிலும் உத்திபூர்வ நம்பிக்கை, ஒத்துழைப்பாலும் ஆழமாகப் பதிந்துள்ளது,” என்று தமது கடிதத்தில் விவரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் சிங்கப்பூரும் கனடாவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

“உங்கள் புதிய பொறுப்பில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மீண்டும் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று பிரதமர் வோங், பிரதமர் கார்னிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்