தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் வோங்: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் வலிமையுடன் இருக்க வேண்டும்

2 mins read
6b0654a4-ef13-4067-ab90-273b68ba213f
வியட்னாம் தலைநகர் ஹனோயில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ்பாவ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து வலுவான ஆட்சி அதிகாரம் கிடைப்பது மட்டும் முக்கியமன்று என்று பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மார்ச் 26) கூறியுள்ளார்.

புதிய உலகளாவிய சூழலில் சிங்கப்பூருக்குக் காத்திருக்கும் சவால்களைச் சிங்கப்பூரர்கள் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் செழித்தோங்கவும் சிங்கப்பூர் வலிமைமிக்க நாடாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எனவே, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது.

“தேர்தலின்போது மக்கள் செயல் கட்சி சார்பாக எனது கருத்துகளை முன்வைப்பேன். சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்ற நாட்டு மக்கள் எனக்கு வாய்ப்பு அளிப்பர் என்று நம்புகிறேன்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

வியட்னாமுக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட திரு வோங், அந்நாட்டுத் தலைநகர் ஹனோயிலிருந்து சிங்கப்பூர் திரும்புமுன் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.

2024ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரின் பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, வியட்னாமுக்கு அவர் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை.

புருணை, மலேசியா, லாவோஸ், இந்தோனீசியா, தாய்லாந்து போன்ற ஆசியான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதன் மூலம் அந்நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்தியிருப்பதாகத் திரு வோங் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள பங்காளித்துவத்தை இந்தப் பயணங்கள் மறுஉறுதி செய்ததாக அவர் கூறினார்.

மேலும், இப்பயணங்கள் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய துறைகளை அடையாளம் காண முடிவதாகத் திரு வோங் தெரிவித்தார்.

“உலகில் ஏற்படும் மாற்றங்களை ஆசியான் நாடுகளைச் சேர்ந்தோர் தெளிவாகப் பார்த்து, நன்கு உணர முடிகிறது. உலக நடப்பில் பேரளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போட்டித்தன்மை தீவிரமடைவதுடன் வர்த்தக இடையூறுகள் மோசமடைகின்றன,” என்று பிரதமர் வோங் கூறினார்.

மக்கள் செயல் கட்சியையும் தலைமைத்துவக் குழுவையும் புதுப்பிக்க கடுமையாக முயன்று வருவதாக 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மக்கள் செயல் கட்சி மாநாட்டில் தாம் கூறியிருந்ததை அவர் சுட்டினார்.

“கட்சியையும் தலைமைத்துவக் குழுவையும் புதுப்பிக்க கடந்த ஓரிரு ஆண்டுகளாக அதிக நேரம் செலவழித்து தீவிரமாக முயன்று வருகிறேன். கட்சிப் புதுப்பிப்பில் அதிகக் கவனம் செலுத்தாமல் தற்போதுள்ள குழுவுடன் தேர்தலில் களமிறங்க முடிவெடுத்திருக்க முடியும்.

“அவ்வாறு செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளைப் பிரச்சினையின்றிக் கடந்துவிட முடியும். ஆனால் கட்சியையும் தலைமைத்துவக் குழுவையும் புதுப்பிக்காவிடில் அடுத்த பத்து முதல் 15 ஆண்டுகளில் அதன் காரணமாக ஏற்படும் தாக்கத்தை உணர முடியும்.

“அவ்வாறு நேர்ந்தால் மக்கள் செயல் கட்சிக்கு மட்டுமன்றி, சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்