பொதுத் தேர்தலில் 2025இல் மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதியை மீண்டும் வசப்படுத்தியதை அடுத்து பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவரது மக்கள் செயல் கட்சி அணியும் ஞாயிற்றுக்கிழமை காலை (மே 4) மக்களைச் சந்தித்தனர்.
திரு வோங்குடன் திரு அலெக்ஸ் யாம், திரு ஸாக்கி முகமது, திரு ஹெனி சோ ஆகியோர் குடியிருப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி சொல்ல காலை 8.55 மணியளவில் மார்சிலிங் சந்தைக்குச் சென்றனர். மக்கள் செயல் கட்சி அணிக்கு வாழ்த்துச் சொல்ல பலர் திரண்டனர்.
மக்கள் செயல் கட்சியின் இரும்புக் கோட்டையாகக் கருதப்படும் மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 26.45% வாக்குகளைப் பெற்றது. திரு ஜுஃப்ரி சலிம், திரு அலெக் டொக், திரு அரிஃபின் ஷா, டாக்டர் ஜிஜின் வோங் ஆகியோர் கட்சியில் இடம்பெற்றனர்.
110,100 பேர் வாக்களிக்க தகுதிபெற்ற மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி 73.46% வாக்குகளை வென்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைப் பின்னுக்குத் தள்ளியது.
2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மார்சிலிங் - யூ டீ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மூன்று முறை போட்டியிட்டது. அந்த மூன்று முறையும் மக்கள் செயல் கட்சிக்கு அபார வெற்றி.
திரு வோங்கும் அவரது அணியும் திறந்த பேருந்தில் மார்சிலிங் சந்தையிலிருந்து இயூ டீ ஸ்குவேர் வரை வெற்றி உலா சென்றனர்.
தேர்தல் முடிவுகள் பிரதமர் வோங்கின் திட்டத்துக்குக் கிடைத்திருக்கும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்துவதாகக் கூறிய திரு யாம், “அதிகமான வாக்கு விகிதம், குடியிருப்பாளர்களுக்கு அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்தும் கூடுதல் பொறுப்புடன் வந்துள்ளதைச் சுட்டுகிறது,” என்றார்.
மக்கள் செயல் கட்சியின் அபார வெற்றி அவர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் நீண்டகாலத்தில் தங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று குடியிருப்பாளர்கள் கூறினர்.