தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரிம வெளியீட்டிற்குக் கட்டணம் விதிக்க ஏபெக் மாநாட்டில் பிரதமர் வோங் வலியுறுத்து

2 mins read
f1bf60a5-8105-4bc1-afeb-2579d261d0bb
பெரு தலைநகர் லிமாவில் நடைபெற்ற ஏபெக் உச்சநிலைக் கூட்டத்தின் இறுதிநாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பிற நாட்டுத் தலைவர்களுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (பின் வரிசையில் இடக்கோடி). - படம்: ராய்ட்டர்ஸ்

கரிமப் பயன்பாட்டை முற்றாக ஒழிக்கும் இலக்கை எட்ட, கரிம வெளியீட்டிற்குப் படிப்படியாகக் கட்டணம் நிர்ணயிக்குமாறு ஏபெக் தலைவர்களை பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தி உள்ளார்.

ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சநிலைக் கூட்டத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (நவம்பர் 16) உரையாற்றிய திரு வோங், “அரசியல் ரீதியாக உணர்வுமிக்க விவகாரம் என்பதால் கரிம வெளிப்பாட்டுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆயினும், கரிமத்தை முற்றாக ஒழிப்பதற்கு அவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தோன்றவில்லை,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கட்டணம் விதிப்பது என்பது கரிமத் தயாரிப்பாளர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் தீவிரமான கரிம நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு தெளிவாக கோடிகாட்டும்.

“அத்துடன், கரிமச் சந்தைகளில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தை அது அதிகரிக்கும்.

“மாற்று எரிசக்தி ஆற்றலைப் பெற இயலாத நிலையிலுள்ள நாடுகளும் கரிம வெளியீட்டைக் குறைக்க கரிம வர்த்தகம் அனுமதிக்கிறது. எனவே, இது தெளிவான இருதரப்பு வர்த்தகத்தின் வெளிப்பாடாக அமையும்.

“கரிமச் சந்தையில் ஒத்துழைப்பை எட்டுவதற்கான உடன்பாடுகளிலும் புரிந்துணர்வுக் குறிப்புகளிலும் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர், ஏபெக் நாடுகளுடன் இணைந்து இன்னும் அதிகம் செயல்பட விரும்புகிறது,” என்று பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

கரிமச் சந்தை தொடர்பாக இவ்வாறு தமது கருத்துகளை வெளிப்படுத்திய திரு வோங், கரிமம் குறைந்த மின்சக்தியைத் தருவித்துப் பயன்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.

“காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அம்சங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன், அடிப்படை மின் உற்பத்திக்கு இன்னும் குறைவான கரிம எரிபொருள்கள் தேவைப்படுகின்றன,” என்றார் திரு வோங்.

மின் உற்பத்திக்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்துப் பேசிய பிரதமர், அதனைப் பெரிய அளவில் பயன்படுத்தும்போது செலவுகளும் அதிகரிக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்