அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் பதவி விலகினார்

அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் பதவி விலகினார்

3 mins read
26df969e-122e-4312-bde6-114ff7b16c61
இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர்

இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கப் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மக்கள் செயல் கட்சி உறுப்பினர் நிலையிலிருந்தும் விலகுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங், திங்கட்கிழமை (ஜூலை 20) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், தாம் அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகத் திரு வோங் குறிப்பிட்டுள்ளார்.

இணைப் பேராசிரியர் ஃபைஷால், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகவும் உள்துறைக்கான மூத்த துணையமைச்சராகவும் பதவி வகித்தார்.

பிரதமருக்கும் இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிமுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றங்களும் அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் தாம் பதவி விலகுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு அனுப்பிய கடிதம்.
இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் தாம் பதவி விலகுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு அனுப்பிய கடிதம். - படம்: பிரதமர் அலுவலகம்
இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் எழுதிய கடிதம்.
இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் எழுதிய கடிதம். - படம்: பிரதமர் அலுவலகம்

ஒரு மாதத்திற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்திற்குப் பெண் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறிய பிரதமர், அந்த மின்னஞ்சலில் இணைப் பேராசிரியர் ஃபைஷாலுடன் கருத்துப் பரிமாறிக்கொண்டதன் தொடர்பில் அப்பெண் கவலை தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதுகுறித்து உடனடியாக விசாரிக்கும்படி தாம் உத்தரவிட்டதாகத் திரு வோங் கூறினார்.

இரு தரப்பின் கருத்துகளையும் அறியும் பொருட்டு இணைப் பேராசிரியர் ஃபைஷாலிடமும் அப்பெண்ணிடமும் தனித்தனியே இதுகுறித்துப் பேசப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இருவருக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றம் பெரும்பாலும் இணையவழிக் குறுஞ்செய்திகள் மூலமாகவே நிகழ்ந்தது என்றும் சில பொது நிகழ்ச்சிகளுக்கு இடையே இருவரும் சந்தித்ததுண்டு என்றும் பிரதமர் கூறினார். இருவருமே தாங்கள் இணையம் வழி துன்புறுத்தப்பட்டதாகக் கருத்துரைத்தனர் என்றும் அதையடுத்து இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

காவல்துறை இதன் தொடர்பில் விசாரணை நடத்தியது. நடந்தவற்றையும் சூழல்களையும் கவனமாகக் கருத்தில்கொண்டதுடன் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடமும் காவல்துறை கலந்தாலோசித்தது. அதன் பிறகு, இரு தரப்பும் குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று மதிப்பிடப்பட்டது. அதனால் யார் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று பிரதமர் தெரிவித்தார்.

இருப்பினும், அரசாங்கத்தில் பதவி வகிப்பவர் என்ற முறையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இணைப் பேராசிரியர் ஃபைஷால் அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட தரநிலையில் நடந்துகொண்டாரா என்ற கேள்வி எழுந்ததாகப் பிரதமர் கூறினார். அதுகுறித்துக் கருத்துரைத்த இணைப் பேராசிரியர் ஃபைஷால் தாம் அந்தத் தரநிலையைப் பூர்த்திசெய்யத் தவறிவிட்டதாக ஒப்புக்கொண்டதுடன் பதவி விலகல் கடித்ததைச் சமர்ப்பித்ததாகவும் திரு வோங் சொன்னார்.

இணைப் பேராசிரியர் ஃபைஷால் கடந்த 20 ஆண்டுகளாகப் பொதுச் சேவையில் கணிசமான பங்களித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், சமூக மீள்திறனை வலுப்படுத்தியதுடன் மறுவாழ்வு, முன்னாள் குற்றவாளிகளைச் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல், எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் மேம்பாடு போன்றவற்றில் முக்கியப் பங்காற்றியவர் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் கடுமையாக உழைத்ததாகவும் தமது தொகுதிவாசிகளுக்குச் சிறப்பாகச் சேவையாற்றியதாகவும் கூறிய பிரதமர் அத்தகைய பங்களிப்புக்காகத் தாம் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இணைப் பேராசிரியர் ஃபைஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட மரீன் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் உள்ள மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெம்பாங்கான் குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவர் என்று பிரதமர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்