செயற்கை நுண்ணறிவுத் திறனை வளர்க்க ஊழியர்களுக்கு உதவி: பிரதமர் வோங்

செயற்கை நுண்ணறிவுத் திறனை வளர்க்க ஊழியர்களுக்கு உதவி: பிரதமர் வோங்

2 mins read
aa6c95f1-5999-4895-a2b0-1e7c2b782583
புதிதாக அமைக்கப்படும் தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம் குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்டத்தில் பேசினார்.  - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

சிங்கப்பூரில், புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் வேலையிட மாற்றங்களைச் சமாளிக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் உதவி பற்றி பிரதமர் லாரன்ஸ் வோங் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை, மே 1ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு நடைபெறவிருக்கும் மே தினப் பேரணியில் பிரதமர் வோங் உரையாற்றுவார்.

“செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றால் வேலையிட பொறுப்புகள் உருமாறும். புதிய சூழலுக்கு ஏற்ப ஊழியர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு உதவிசெய்ய அரசாங்கம் கொண்டிருக்கும் உறுதி மாறாது,” என்று எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) பிரதமர் வோங் பதிவிட்டார்.

பிரதமர் வோங், பிப்ரவரி மாத வரவுசெலவுத் திட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் $154.7 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவ அறிவிக்கப்பட்ட அந்த நிதி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நிறுவனங்களுக்கும் உதவுகிறது.

வர்த்தகர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்படி ஊக்குவிக்கும் புதிய கொள்கைகள் குறித்தும் திரு வோங் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்தார்.

விரைவாக வளரும் செயற்கை நுண்ணறிவு குறித்த கவலையையும் திரு வோங் சுட்டினார். சிங்கப்பூர் அதைச் சரியான விதத்தில் கையாண்டு செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்யவேண்டும் என்றார் அவர்.

புதிதாக அமைக்கப்படும் தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம் குறித்தும் வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட திரு வோங், அந்த மன்றத்துக்குத் தலைமை தாங்கவிருப்பதையும் பகிர்ந்துகொண்டார்.

இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவின் வரவால் ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடாது என்று நிதி ஒதுக்கீட்டின்போது பிரதமர் வோங் வாக்குறுதி அளித்தார்.

செயற்கை நுண்ணறிவின் அறிமுகத்தால் வெவ்வேறு துறைகளில் உள்ள சிங்கப்பூர் ஊழியர்கள் பின்தங்கிவிடலாம் அல்லது வேலைகளை இழக்கலாம் என்று நிதி ஒதுக்கீட்டின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக, புதிய பட்டதாரிகள் செய்யும் சில வேலைகளைச் செயற்கை நுண்ணறிவுத் தட்டிப் பறித்துக்கொள்ளும் என்ற கவலையும் முன்வைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுஊழியர்கள்உதவி