பிரதமர் லாரன்ஸ் வோங், புதன்கிழமையிலிருந்து (அக்டோபர் 29) சனிக்கிழமைவரை (நவம்பர் 1) ஏபெக் எனும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தென்கொரியா செல்கிறார்.
கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திரு வோங், தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்கின் அழைப்பை ஏற்று தலைநகர் சோலுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
அங்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உத்திபூர்வப் பங்காளித்துவ நிலைக்கு மேம்படுத்த தலைவர்கள் இருவரும் இணக்கம் காண்பர் என்று அறிக்கை குறிப்பிட்டது.
மாநாட்டுக்கு இடையே மற்ற நாடுகளின் தலைவர்களுடனும் இரு தரப்புப் பேச்சுகளில் பிரதமர் கலந்துகொள்வார்.
பசிபிக் கடற்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் 21 பொருளியல்களின் தலைவர்கள் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க முயற்சிகளை எடுப்பர்.
பல்வேறு அம்சங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவிருக்கின்றன. வர்த்தகத்தையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும் வழிகள், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பதைப் பற்றி ஆலோசித்தல் முதலியவை அவற்றுள் சில.
ஏபெக் மாநாட்டின் முக்கியக் கூட்டங்களுக்கு முன்னர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் கியோங்ஜுவில் வியாழக்கிழமை சந்திப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
திரு டிரம்ப் இரண்டாம் முறையாக அதிபர் பதவியை ஏற்ற பிறகு அவர்கள் சந்திக்கவிருப்பது இதுவே முதன்முறை. இரு நாட்டுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் வோங் ஏபெக் பொருளியல் தலைவர்கள் கூட்டத்திலும் ஏபெக் வர்த்தக ஆலோசனை மன்ற உரையாடலிலும் மற்ற தலைவர்களுடன் பங்கெடுப்பார் என்று அறிக்கை சொன்னது.
பயணத்தின் முதற்கட்டத்தில் திரு வோங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு, உள்துறை மூத்த துணையமைச்சர் சின் ஆன் முதலியோரும் பிரதமர் அலுவலகம், வர்த்தக, தொழில், வெளியுறவு அமைச்சுகள் ஆகியவற்றின் அதிகாரிகளும் செல்வர்.
திரு வோங், பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இரு நாடுகளும் அவற்றுக்கு இடையில் அரசதந்திர உறவைத் தொடங்கி 50 ஆண்டு நிறைவுற்றதைக் கொண்டாடும் வேளையில் அவரின் பயணம் இடம்பெறுகிறது.
பிரதமருடன் அவரின் துணைவியார், திருவாட்டி சிம், சுகாதார மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், போக்குவரத்து, சட்ட மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை முதலியோரும் சோலுக்குச் செல்வர்.
பிரதமர் சிங்கப்பூரில் இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தற்காலிகப் பிரதமராகச் செயலாற்றுவார்.

