சிங்கப்பூரர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துவருவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.
ஒருவரின் திறன்கள், அனுபவம், விருப்பங்களுக்கு ஏற்ப சரியான வேலையைப் பொருந்தச் செய்யும் சேவைகளை அரசாங்கம் அதிகரிக்கவுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய பட்டதாரிகள் பல விதமான வேலை வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள வாழ்க்கைத் தொழில் கண்காட்சிகள் அதிகமாக்கப்படும்.
உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்குச் சரியான வாழ்க்கைத் தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்க இது ஏதுவாக அமையும்.
நகர அளவில் ஒரு புதிய வேலைவாய்ப்பு பொருந்துதல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார். அத்திட்டத்தை சமூக மேம்பாட்டு மன்றங்கள் வழிநடத்தவுள்ளன.
சமூக மேம்பாட்டு மன்றங்களுக்கு சமூகப் பங்காளிகள், உள்ளூர் நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்களுடன் நெருக்கமான பிணைப்பு இருப்பதால் வேலை தேடுவோர், குறிப்பாக, வீட்டிற்கு அருகில் வேலை வாய்ப்புகளைத் தேடுவோருக்கு இது மிக உதவியாக இருக்கும் என்று திரு வோங் சொன்னார்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பற்றி தமது உரையில் பேசிய பிரதமர் வோங், ஊழியர்களின் திறன்கள் தொடர்ந்து மேம்படுத்தி, புதிய திறன்கள் கற்றுக்கொடுக்கப்படும் என்றார்.
சென்றாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இரண்டு புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பயிற்சிப் படித்தொகையின் ஒரு பகுதியைப் பகுதிநேரப் பயிற்சி வகுப்புகளுக்குப் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக, ஏற்கெனவே வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் விரிவாக்கம் செய்யப்படும். துறைத் தலைவர்கள், தனியார் பயிற்சி வழங்குபவர்கள் ஆகியோர் நடத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

