வருங்காலச் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க வெவ்வேறு அனுபவங்களையும் மாறுபட்ட கண்ணோட்டங்கள் மற்றும் சிந்தனைகளையும் கொண்டவர்களையே மக்கள் செயல் கட்சி (மசெக) தேடுகிறது என்று பிரதமரும் மசெக தலைமைச் செயலாளருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
கட்சியிலுள்ள அனைவரும் ஒரேவிதமாகச் சிந்திப்பதை மசெக விரும்பாது என்றும் அவர் கூறியுள்ளார்.
“மசெக தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளவும் நீண்ட காலத்திற்குச் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தவும் இந்த பன்முகத்தன்மை அவசியம்.
“சேவை செய்யத் தயாராக உள்ள நல்ல மனிதர்களைக் கொண்டு ஒவ்வொரு தலைமுறையும் கட்சியைப் புதுப்பித்தால் மட்டுமே, மசெகவால் சிங்கப்பூரைத் தொடர்ந்து சிறப்பாக ஆள முடியும்.
“சிங்கப்பூரை முன்னோக்கிக் கொண்டுசெல்ல, ஒவ்வொரு தலைமுறையும் புத்தம் புதிய சிந்தனைகளையும் புதிய ஆற்றலையும் கொண்டுவர வேண்டும்,” என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
மசெக இளையர் பிரிவின் 40வது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு திரு வோங் பேசினார்.
மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், மசெகவையும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசையும் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட இளையர்கள் கலந்துகொண்டனர்.
இளையர் பிரிவுக்குப் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “கட்சியில் உள்ளவர்கள் எல்லாவற்றுக்கும் எங்களுடன் உடன்பட வேண்டிய அவசியமில்லை. உண்மையான நிலைமை அதற்கு நேர்மாறானது,” என்றார்.
“சிங்கப்பூர் பற்றியும் நமது எதிர்காலம் குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்போரும் நமது நாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த யோசனைகளைக் கொண்டிருப்போரும் மசெகவில் இணையலாம்,” எனத் திரு வோங் அழைப்பு விடுத்தார்.
“வெற்றிபெறும் வாய்ப்பு குறைவாகக் காணப்படும் தரப்பினரை நோக்கி இளையர்கள் சிலர் ஈர்க்கப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், மசெகவைப் பார்த்து ‘இது ஏற்கெனவே ஒரு பெரிய, வலுவான கட்சி; இதற்கு நான் தேவைப்பட மாட்டேன்’ என நீங்கள் கருதினால் அது தவறு,” என்றார் அவர்.
மசெக இளையர் பிரிவு 40 வயதிற்கு உட்பட்ட குடிமக்களைக் கட்சியில் ஈடுபடுத்தும் நோக்கம் கொண்டது. துணை அமைச்சர் ஆல்வின் டான் தலைமையில் இயங்கும் அந்தப் பிரிவு, இளையர்களிடமிருந்து கருத்துகளைத் திரட்டுவதில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

