ஆஸ்திரேலியா, கத்தார் துணைப் பிரதமர்களைச் சந்தித்த பிரதமர் வோங்

ஆஸ்திரேலியா, கத்தார் துணைப் பிரதமர்களைச் சந்தித்த பிரதமர் வோங்

1 mins read
8b254923-711d-4212-82ca-9960d477fd86
கத்தார் துணைப் பிரதமருடன் இருதரப்பு உறவை வலுவாக்குவது குறித்துப் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

ஆஸ்திரேலியா, கத்தார் நாடுகளின் துணைப் பிரதமர்களைச் சந்தித்த பிரதமர் லாரன்ஸ் வோங், இருதரப்பு தற்காப்பு உறவை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தினார்.

23வது ஷங்ரிலா மாநாட்டையொட்டி மே 30ஆம் தேதி அந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.

கத்தார் துணைப் பிரதமரும் தற்காப்புத் துணை அமைச்சருமான ஷேக் சாவுத் பின் அப்துல்ரஹமான் அல் தானியுடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையே அன்பான, நட்புணர்வாய்ந்த இருதரப்பு உறவு மறுவுறுதிப்படுத்தப்பட்டது என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இஸ்தானாவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சிங்கப்பூரின் தற்காப்புத் துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூவும் பங்கேற்றார். அப்போது இரு தலைவர்களும் தற்காப்பு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

பிரதமர் வோங்கும், வட்டார நிலைத்தன்மையை மேம்படுத்துவற்கும் மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைக்கு உதவியதற்கும் கத்தாரின் பங்கைப் பாராட்டினார்.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையிலான மோதலில் சிக்கியுள்ள கத்தார், அப்பகுதிகளிலிருந்து சிங்கப்பூர் மக்கள் தாயகம் திரும்புவதற்கான சிங்கப்பூரின் முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளது.

பிரதமர் வோங், இஸ்தானாவில் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸையும் சந்தித்தார். அப்போது, வட்டாரப் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

முக்கியமாக நீருக்கடியில் உள்ள உள்கட்டமைப்பு போன்றவற்றில் இருதரப்புத் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஆஸ்திரேலியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள தற்காப்பு வசதிகளுக்கு இரு நாடுகளின் ராணுவங்களும் பரஸ்பரமாக அணுகுவதையும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆஸ்திரேலியாகத்தார்தற்காப்பு