ஷென்செனில் வியட்னாம், பெரு, சிலி தலைவர்களைச் சந்தித்த பிரதமர் வோங்

ஷென்செனில் வியட்னாம், பெரு, சிலி தலைவர்களைச் சந்தித்த பிரதமர் வோங்

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

19 Nov 2026 - 9:47 am

2 mins read

ஷென்சென்: ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபெக்) பொருளியல் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (நவம்பர் 18)ஷென்சென் நகருக்குச் சென்றார்.

மாநாட்டையொட்டி வியட்னாம், சிலி, பெரு தலைவர்களுடன் அவர் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தினார்.

“நான் கடைசியாக ஷென்செனுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, அந்நகரம் பேரளவில் உருமாற்றம் கண்டுள்ளது. அது என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது,” எனத் திரு வோங் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் (Robotics) ஆகிய துறைகளில் புத்தாக்கத்திற்கான துடிப்பான நடுவமாக ஷென்சென் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் அளித்த வரவேற்பு விருந்தில் பங்கேற்குமுன், மூன்று தலைவர்களைப் பிரதமர் வோங் தனித்தனியாகச் சந்தித்தார்.

வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அந்நாட்டு அதிபருமான தோ லாம், மே மாதம் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட ஆறு மாதங்களுக்குள் இச்சந்திப்பு நடந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிங்கப்பூரும் வியட்னாமும் தங்கள் உறவை விரிவான உத்திசார்ந்த பங்காளித்துவமாக உயர்த்தின. வேளாண் வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன.

இவ்வாண்டு மார்ச்சில் சிலி அதிபராகப் பதவியேற்ற ஹோசே அன்டோனியோ காஸ்ட்டுடனும் திரு வோங் கலந்துரையாடினார்.

மூன்றாவதாகப் பெரு அதிபர் கெய்கோ புஜிமோரியை திரு வோங் சந்தித்தார்.

2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்புத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆசிய நாடு ஒன்றுடன் பெரு செய்துகொண்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்லாரன்ஸ் வோங்வியட்னாம்தலைவர்சந்திப்புஏபெக்

தொடர்புடைய செய்திகள்