கோலாலம்பூர்: பிரதமர் லாரன்ஸ் வோங், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு இடையே சந்தித்துள்ளார்.
அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட திரு வோங், பிரேசிலிய அதிபர் லியுஸ் இனஷியோ லுலா டா சில்வாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். அவர்கள் இருவரும் கடைசியாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சநிலைச் சந்திப்பின்போது சந்தித்துக்கொண்டனர்.
லத்தீன் அமெரிக்காவில் பிரேசில்தான் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடு என்றும் முக்கிய உணவுப் பாதுகாப்பு பங்காளி என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
“பருவநிலை முயற்சிகள், கரிமச் சந்தை, நீடித்த எரிசக்தி ஆகிய அம்சங்களில் இணக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்திருக்கிறோம்,” என்றார் அவர்.
பிரதமர் வோங் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசாவையும் சந்தித்துப் பேசினார். நவம்பர் மாதத்தின்போது ஜோஹன்னஸ்பர்கில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சநிலைச் சந்திப்புக்கு சிங்கப்பூரை அழைத்ததற்காகத் திரு ராமஃபோசாவுக்குத் திரு வோங் நன்றி தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவும் சிங்கப்பூரும் வலுவான, வளரும் பந்தத்தைக் கொண்டிருப்பதாகவும் அது இருதரப்பு மரியாதை, ஒரே எண்ணங்கள் ஆகியவற்றில் உருவாகியிருக்கிறது என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
வர்த்தகம், புத்தாக்கம், நிலைத்தன்மை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி தலைவர்கள் கலந்துரையாடினர். ஆசியான்- ஆப்பிரிக்கத் தொடர்புகளை எப்படி வலுப்படுத்துவது என்பதைப் பற்றியும் அவர்கள் கலந்துரையாடினர்.
அதே நாளில் திரு வோங், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவைச் சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் கலந்துரையாடினர். குறிப்பாக, வர்த்தகம், மின்னிலக்கப் பொருளியல் ஆகியவை குறித்து அவர்கள் உரையாடினர்.
சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு ஒரே சிந்தனையுள்ள பங்காளித்துவ நாடுகளாக இருக்கின்றன என்றும் இரண்டும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு ஒழுங்கை வலுவாக ஆதரிக்கின்றன என்றும் திரு வோங் சுட்டினார்.

