சிங்கப்பூரில் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து ஆராய, வரும் 2027ஆம் ஆண்டில் அனைத்துலக அணுசக்தி அமைப்பு விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஆய்வில், அணுசக்திப் பாதுகாப்பு , கதிரியக்கக் கழிவு மேலாண்மை, அவசரகாலத் திட்டம் உள்ளிட்ட 19 முக்கிய அம்சங்களின்கீழ் நாட்டின் திறன் மதிப்பிடப்படும்.
இதுதொடர்பான அறிவிப்பை எரிசக்திச் சந்தை ஆணையத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஷாங்கிரி-லா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெற்ற இரவு விருந்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டார்.
சிறிய அளவிலான அணு உலைகள் போன்ற அதிநவீன அணுசக்தித் தொழில்நுட்பங்களை வருங்காலத்தில் பயன்படுத்துவது குறித்துத் தெளிவான முடிவெடுப்பதற்குத் தேவையான நிபுணத்துவம், கட்டமைப்பு, நிறுவனங்கள் ஆகியவை சிங்கப்பூரிடம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க இந்த ஆய்வு உதவும் என அவர் விளக்கினார்.
இருப்பினும், இந்த ஆய்வு முடிவுகள் மட்டுமே சிங்கப்பூரில் அணுசக்திப் பயன்பாட்டைத் தீர்மானிக்காது எனப் பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே அணுசக்தித் தொழில்நுட்பங்கள் குறித்துச் சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பாக, அணுசக்திப் பாதுகாப்பில் தமது சொந்தத் திறன்களைப் படிப்படியாக நாடு வளர்த்துக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, அணுசக்தித் திட்டங்களை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்கும் நாடுகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட அணுசக்தி உள்கட்டமைப்பு மதிப்பாய்வின் முதற்கட்டப் பணியை வரும் 2027ஆம் ஆண்டில் சிங்கப்பூர் முறைப்படி தொடங்கும் என்றார் பிரதமர்.
இரவு விருந்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த எரிசக்தி உத்திகள் குறித்து விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சூரியசக்தி, ஹைட்ரஜன், அணுசக்தி போன்ற குறைந்த அளவு கரிமத்தை வெளியேற்றும் மாற்று எரிசக்திகளை ஆராய்வதும் நாட்டின் எரிசக்தி உத்திகளில் அடங்கும் என்றார் அவர்.
“உலகளவில் மின்தேவை அதிகரித்துவரும் வேளையில், அணுசக்தி மீதான ஆர்வம் மீண்டும் துளிர்விட்டுள்ளது. அணுசக்தியானது மிகவும் நம்பகமானது. குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்டது. அதிக ஆற்றல் செறிவுமிக்கது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது, அணு உலைத் தொழில்நுட்பங்களும் அவற்றின் பாதுகாப்பு அமைப்புகளும் அதிநவீன வளர்ச்சியை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.

