மணிலா: தென்கிழக்காசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல பிரதமர் லாரன்ஸ் வோங் மூன்று யோசனைகளை முன்மொழிந்துள்ளார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) நடைபெற்ற 23வது ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டில் பிரதமர் வோங் உரையாற்றினார்.
தென்கிழக்காசியாவும் இந்தியாவும் நூற்றாண்டுகாலப் பண்பாட்டு, பொருளியல் பிணைப்புகளைக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய போட்டிகளும் பிளவுகளும் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில், ஆசியான்-இந்தியா இடையிலான வலுவான ஒத்துழைப்பு இவ்வட்டாரத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் மீள்திறனுக்கும் அடித்தளமாக அமையும் என்று திரு வோங் தெரிவித்தார்.
அந்த ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் மூன்று யோசனைகளையும் முன்வைத்தார்.
“முதலாவதாக, ஆசியான்-இந்தியா சரக்கு வணிக உடன்பாட்டைத் தற்காலப் பொருளியல் சூழலுக்கு ஏற்பப் புதுப்பிக்க வேண்டும். அதுகுறித்த மறுஆய்வை உரிய நேரத்தில் முடிவிற்கு கொண்டுவந்தால், இருதரப்பு நிறுவனங்களுக்கும் புதிய வணிக, முதலீட்டு வாய்ப்புகள் திறக்கும்,” என்றார் அவர்.
மின்னிலக்கப் பொருளியல் துறையில், ஆசியானின் மின்னிலக்க உருமாற்றத்திற்கு இந்தியா முக்கியப் பங்காளியாக உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த மின்னிலக்க எதிர்காலத்திற்கான ஆசியான்-இந்தியா நிதியம் போன்ற திட்டங்களைத் திரு வோங் வரவேற்றார்.
புதிதாகக் கையெழுத்தான மின்னிலக்கப் பொருளியல் பணிச்சட்ட உடன்பாட்டைப் பயன்படுத்தி, இந்திய நிறுவனங்கள் தென்கிழக்காசியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பது பிரதமரின் இரண்டாவது யோசனை.
இறுதியாக, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் ஆசியான் - இந்தியா கூட்டுச் செயல்திறனை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வட்டார அமைதி, பாதுகாப்புத் துறையில், கடல்துறைப் பாதுகாப்பில் இருதரப்பும் நெருக்கமாகப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. 2023ல் சிங்கப்பூர் ஏற்று நடத்திய முதலாவது ஆசியான்-இந்தியா கடல்துறைப் பயிற்சியைத் தொடர்ந்து, இவ்வாண்டு அக்டோபரில் இரண்டாவது பயிற்சி வெற்றிகரமாக நிறைவுபெற்றதை திரு வோங் வரவேற்றார்.
போட்டியன்று, ஒத்துழைப்பே தேவை: நரேந்திர மோடி
இதனிடையே, உலக மக்கள்தொகையில் கால் பகுதியினரைக் கொண்ட இந்தியாவும் ஆசியான் அமைப்பும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
உலகம் பல நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இவ்வேளையில், அமைதியும் நிலைத்தன்மையும் மிக அவசியம் என்று திரு மோடி குறிப்பிட்டார். போட்டிபோடுவதை விடுத்து, ஒத்துழைப்பின் மூலமே நமது எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா-ஆசியான் உறவு கடந்த 12 ஆண்டுகளில் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. 2014 முதல் இருதரப்புப் பிணைப்பை வலுப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன; 250 விரைவுத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவுக்கும் ஒன்பது ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகளும் சுற்றுப்பயணத் துறையின் வளர்ச்சியும் இருதரப்பு நெருக்கத்தைக் காட்டுவதாகத் திரு மோடி தெரிவித்தார்.
