தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்புக்காக தாய்லாந்து செல்கிறார் பிரதமர் வோங்

தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்புக்காக தாய்லாந்து செல்கிறார் பிரதமர் வோங்

2 mins read
b684e20f-30c8-465f-a9ef-b88a51d9625b
சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுலும் சென்ற ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியுறவு அமைச்சில் கைகுலுக்கிக்கொண்ட காட்சி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்‌ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: சிங்கப்பூர்ப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் சிங்கப்பூர்-தாய்லாந்துத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காகப் புதன்கிழமை (செப்டம்பர் 2) பேங்காக்கிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

திரு வோங்கிற்கும் தாய்லாந்துப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான திரு அனுட்டின் சார்ன்விராகுலுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் முதல் ஓய்வுத்தளச் சந்திப்பு இது.

தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்ற சிறிது காலத்தில் திரு அனுட்டின் சிங்கப்பூருக்குக் கடந்த ஆண்டு நவம்பரில் வருகை புரிந்திருந்தார். அதன் பிறகு இப்போது திரு வோங்கின் பயணம் அமைகிறது.

திரு வோங்கின் தாய்லாந்துப் பயணத்தின்போது திரு அனுட்டின் அவருக்குத் தனிப்பட்ட முறையில் மதிய விருந்தளிப்பார்.

சமுதாய மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தமொன்றில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் தலைவர்கள் இருவரும் கலந்துகொள்வர்.

சிங்கப்பூர்ப் பிரதமருக்குத் திரு அனுட்டின் இரவு விருந்தளித்துச் சிறப்பிப்பார்.

பிரதமர்கள் இருவரும் இரு நாடுகளுக்கும் இடையே நெடுங்காலமாக இருந்துவரும் பாதுகாப்பு, பொருளியல் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வர். அத்துடன் அனைத்துலக, வட்டார அளவில் நிகழும் விவகாரங்கள் குறித்த கருத்துகளையும் அவர்கள் பரிமாறிக்கொள்வார்கள்.

சிங்கப்பூர்ப் பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பசுமை, மின்னிலக்கப் பொருளியல்கள், எரிசக்தி மீள்திறன், உணவுப் பாதுகாப்பு, எல்லை தாண்டிய குற்றச்செயல்களுக்கு எதிரான போராட்டம் முதலியவற்றில் ஒத்துழைக்கப் புதிய வாய்ப்புகளைச் சிங்கப்பூரும் தாய்லாந்தும் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வோங்குடன் அவரின் துணைவியாரும் ஐந்து அமைச்சர்களும் செல்வார்கள்.

பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான திரு சான் சுன் சிங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி கிரேஸ் ஃபூ, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோரே அவர்கள்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர்லாரன்ஸ் வோங்தாய்லாந்துதலைவர்சந்திப்பு