சீனாவுடன் கையெழுத்திடப்படவுள்ள 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்

சீனாவுடன் கையெழுத்திடப்படவுள்ள 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்

படம்: தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

21 Nov 2026 - 4:30 pm

2 mins read

பெய்ஜிங்: இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றக் கூட்டத்தில் பங்கேற்கச் சீனத் துணைப் பிரதமர் டிங் சூசியாங் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களும் திட்டங்களும் இறுதி செய்யப்பட உள்ளதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமையன்று (நவம்பர் 21) தெரிவித்தார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியாவ்யுதாய் அரசு விருந்தினர் மாளிகையில் சீனப் பிரதமர் லீ சியாங்குடனான சந்திப்பின் தொடக்கவுரையில் பேசிய பிரதமர் வோங், வர்த்தக மின்னிலக்கமயமாக்கல், நிதி ஒருங்கிணைப்பு முதல் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் ஆய்வு மற்றும் புத்தாக்கம் வரையிலான பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட முக்கியத் திட்டங்கள் இறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்-சீனா இடையிலான ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதற்கும் இருதரப்பு உறவுகளின் உத்திபூர்வத் திசையை நிர்ணயிப்பதற்கும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றம் மிக உயரிய அமைப்பாகும்.

உலகளாவிய சூழல் நாளுக்கு நாள் நிச்சயமற்றதாகவும் சிக்கலானதாகவும் மாறி வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் வோங், சிங்கப்பூரும் சீனாவும் தங்களது பங்காளித்துவத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதும் ஒத்துழைப்பிற்கான புதிய பகுதிகளைக் கண்டறிவதும் முன்னெப்போதையும்விட இப்போது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த சீனப் பிரதமர் லீ, பாரம்பரிய நட்பு அண்டை நாடுகள் என்ற முறையில், சிங்கப்பூருடன் உத்திபூர்வத் தொடர்புகளை வலுப்படுத்தவும் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் மேலும் உறுதியான முடிவுகளை எட்டும் வகையில் தனது அனைத்துத் தரப்பு உயர்தர எதிர்கால நோக்குப் பங்காளித்துவத்தை மேம்படுத்தவும் சீனா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இரு நாட்டு மக்களின் நல்வாழ்வைத் தொடர்ந்து மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

இருதரப்புச் சந்திப்புக்குப் பிறகு, தியாவ்யுதாய் விருந்தினர் மாளிகையில் பிரதமர் வோங், அவரது பேராளர் குழுவினருக்குப் பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார். சிங்கப்பூர்ப் பேராளர் குழுவில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு, உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், மனிதவள மற்றும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறைத் துணையமைச்சர் ஃபூ செசியாங், நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீத் ரசாக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்சீனாஒப்பந்தம்