வருடாந்தரத் தலைவர்கள் சந்திப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் வோங்

வருடாந்தரத் தலைவர்கள் சந்திப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் வோங்

புதிய மேற்கு சிட்னி விமான நிலையத்திற்கு முதல் எஸ்ஐஏ விமானத்தில் பயணம்
படம்: சாவ் பாவ்

22 Nov 2026 - 8:10 pm

2 mins read

கேன்பரா: பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (நவம்பர் 23) முதல் 25ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசைச் சந்திக்கிறார்.

மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார் பங்காளித்துவம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு மேலான நிலையில், கேன்பரா, சிட்னி நகர்களுக்கான மூன்று நாள் பயணத்தில் இரு தலைவர்களும் 11வது சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா வருடாந்தரத் தலைவர்கள் சந்திப்புக்கு இணைந்து தலைமை தாங்குவர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையத்திற்கு திங்கட்கிழமை பிரதமர் வோங் சென்றடைவார். இது, அப்புதிய விமான நிலையத்துக்குச் செல்லும் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமாகும். இது, இரு நாடுகளுக்கு இடையிலான வான்வழி இணைப்பில் முக்கிய மைல்கல்லாகவும் அமைகிறது.

அக்டோபர் 25ஆம் தேதி பயணிகள் சேவையையும் மறுநாள் அனைத்துலக விமானச் சேவையையும் தொடங்கிய மேற்கு சிட்னி விமான நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவராகிறார் பிரதமர் வோங்.

கடந்த 2024ல் அங்குச் சேவை வழங்க உறுதியளித்த முதல் அனைத்துலக விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அங்குப் பறக்கும் முதல் விமானங்களில் ஒன்றாகவும் இருக்கும்.

கேன்பராவில் திரு அல்பனீஸ் அளிக்கும் தனிப்பட்ட காலை விருந்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை இரு தலைவர்களும் வருடாந்தரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவர்.

அடுத்த பத்தாண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் 80 முன்னெடுப்புகளையும் பொருளியல் மீள்திறன், அத்தியாவசிய விநியோகங்களுக்கான ஒப்பந்தத்தையும் இரு நாடுகளும் கொண்டுள்ளன.

பிரதமர் வோங்குடன் அவருடைய மனைவி திருவாட்டி வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலெக்ஸ் இயோ, ஹமீது ரசாக், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் செல்கின்றனர்.

பிரதமர் வோங்கின் ஆஸ்திரேலியப் பயணத்தின்போது துணைப் பிரதமர் கான் கிம் யோங் தற்காலிகப் பிரதமராக இருப்பார்.

குறிப்புச் சொற்கள்