கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குப் பிரதமர் வோங் பயணம்

கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குப் பிரதமர் வோங் பயணம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Oct 2026 - 6:52 pm

2 mins read

பிரதமர் லாரன்ஸ் வோங் முதன்முறையாக மத்திய கிழக்கிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். அவர் கத்தாருக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் செல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை கத்தார் தலைநகர் டோஹாவிற்கும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அபுதாபி மற்றும் துபாய்க்கும் திரு வோங் செல்வார் என்று பிரதமர் அலுவலகம் சனிக்கிழமையன்று (அக்டோபர் 17) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கின் அண்மைய நிலவரங்கள் குறித்து வட்டாரத் தலைவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் பேச்சுவார்த்தை மற்றும் அரசதந்திர வழிகளிலான தீர்வுகளுக்குச் சிங்கப்பூர் வழங்கும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்தப் பயணம் நல்லதொரு வாய்ப்பை வழங்கும் எனப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

அத்துடன், குறிப்பாக எரிசக்திப் பாதுகாப்பு, பொருளியல் மீள்திறன் போன்ற இருதரப்புப் பொது நலன் சார்ந்த துறைகளில் கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடனான ஒத்துழைப்பைச் சிங்கப்பூர் மேலும் வலுப்படுத்திக்கொள்ள இது வழிவகுக்கும்.

கத்தாரில், அந்த நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பிரதமர் வோங் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒன்பதாவது கத்தார்-சிங்கப்பூர் உயர்நிலைக் கூட்டுக் குழுவின் கூட்டத்திற்கு இரு தலைவர்களும் இணைந்து தலைமை தாங்குவர். 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டுக் குழு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு உத்திபூர்வ வழிகாட்டும் முதன்மைத் தளமாக விளங்கி வருகிறது.

இந்தப் பயணத்தின்போது, கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகம்மதையும் பிரதமர் வோங் சந்தித்துப் பேசுவார். வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உறுப்பு நாடுகளில் கத்தார் சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகத் திகழ்கிறது.

தொடர்ந்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் செல்லும் திரு வோங், முதலில் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முகம்மதைச் சந்திக்க இருக்கிறார்.

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் சயீத் அல் நஹ்யானையும் பிரதமர் வோங் சந்திக்கவுள்ளார். பின்னர் துபாய் செல்லும் பிரதமர், ஐக்கிய அரபுs சிற்றரசுகளின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமைச் சந்தித்துப் பேசுவார்.

மத்திய கிழக்கில் சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் விளங்கி வருகிறது.

இந்தப் பயணத்தின்போது, டோஹா மற்றும் துபாயில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பிரதமர் வோங் அங்கு வாழும் சிங்கப்பூரர்களைச் சந்திக்கவுள்ளார்.

பிரதமருடன் அவரது துணைவியார், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை (எரிசக்தி, தொழில்) அமைச்சர் டான் சீ லெங், உள்துறை, வெளியுறவுத் துணையமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீம் ஆகியோருடன் அமைச்சுகளின் அதிகாரிகளும் பிரதமருடன் செல்கின்றனர்.

பிரதமர் வோங் வெளிநாடு செல்லும் காலத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்கத்தார்ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்