சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் 2026 தேசிய தினச் செய்தி சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒலி/ஒளிபரப்பப்படும்.
பிரதமரும் நிதி அமைச்சருமான திரு வோங், தமது உரையை ஆங்கிலத்தில் ஆற்றுவார். துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில்துறை (வர்த்தகம்) அமைச்சருமான கான் கிம் யோங் மாண்டரின் மொழியிலும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது மலாய் மொழியிலும் உரையாற்றுவர்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமிழில் தேசிய தினச் செய்தியை வாசிப்பார்.
ஆங்கிலத்தில் தேசிய தினச் செய்தி மாலை 6.45 மணிக்கு சிஎன்ஏ, சிஎன்ஏ938 ஊடகங்களில் ஒளிபரப்பாகும். மாண்டரினில் இரவு 7 மணிக்கு ஒளிவழி 8, கேபிட்டல் 958 தளங்களிலும் மலாய் மொழியில் இரவு 8.30 மணிக்கு சூரியா ஒளிவழியிலும் தேசிய தினச் செய்தி ஒளிபரப்பப்படும்.
தமிழில் தேசிய தினச் செய்தி இரவு 9 மணிக்கு வசந்தம் ஒளிவழியிலும் ஒலி 968 வானொலியிலும் இடம்பெறும்.
ஒளிபரப்பிற்குப் பிறகு, பிரதமர் அலுவலகத்தின் இணையத்தளத்திலும் (www.pmo.gov.sg) அதன் யூடியூப் பக்கத்திலும் (www.youtube.com/pmosingapore) தேசிய தினச் செய்தியை நான்கு மொழிகளிலும் கேட்க முடியும்.
கடந்த ஆண்டு தேசிய தினச் செய்தியில், பொருளியல் கொந்தளிப்பு, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது உட்பட, சிங்கப்பூர் ‘தனித்துவமானதாக’ நிலைத்திருக்க வேண்டும் என்று திரு வோங் கூறினார்.


