சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால ஆழமான நட்புறவையும் வலுவான இருதரப்புப் பங்காளித்துவத்தையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தாய்லாந்து இளவரசி மகா சக்ரி சிரின்தோர்ன் மூன்று நாள் கல்வி ஆய்வுப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துள்ளார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்ட அறிக்கையில் வெளியுறவு அமைச்சு இத்தகவலை குறிப்பிட்டிருந்தது. மேலும் இப்பயணத்தில் சுலாச்சோம் கிளாவ் அரச ராணுவக் கழகத்தைச் சேர்ந்த குழுவொன்றை இளவரசி சிரின்தோர்ன் வழிநடத்தி வருவதாகவும் அறிக்கை கூறியது.
இப்பயணத்தின்போது, சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குச் சென்று மன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடும் அவர், நாடாளுமன்ற நாயகர் சியா கியான் பெங் அளிக்கும் தேநீர் உபசரிப்பிலும் பங்கேற்கிறார்.
மேலும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த அமைச்சருமான ஸாக்கி முகம்மது வரவேற்பின்கீழ் சாஃப்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில் உள்ள அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியையும் திருவாட்டி சிரின்தோர்ன் பார்வையிடுகிறார்.
தொடர்ந்து, சிங்கப்பூர் நாணய ஆணையம், செந்தோசாவில் உள்ள ‘ஃபோர்ட் சிலோசோ’ ஆகிய இடங்களுக்கும் தாய்லாந்து இளவரசி நேரில் செல்கிறார் என்றும் அறிக்கை விவரித்தது.
71 வயதான இளவரசி சிரின்தோர்ன், வரலாற்றில் இளங்கலைப் பட்டமும் கல்வித்துறையில் முனைவர் பட்டமும் பெற்ற சிறந்த கல்வியாளர். தாய், ஆங்கிலம், பிரெஞ்சு, மாண்டரின் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்ற இவர், 1980 முதல் ராணுவக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தியதற்காக, 2025ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இவருக்குக் கெளரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.


