இணையத்தில் இருக்கும் ஏராளமான தகவல்களைக் கையாள்வதில் சிங்கப்பூர் ஒரு சீரான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
நாட்டின் பொதுநலனையும் தேசிய நலனையும் பாதிக்கும் விவகாரங்களில் மட்டுமே இணைய உள்ளடக்கங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக விதிக்கப்படுகின்றன என்று உள்துறை மூத்த துணை அமைச்சரான சிம் ஆன் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று கூறிய அவர், அதே வேளையில் தேசிய நலனுக்குப் புறம்பான சந்தேகத்திற்குரிய பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம் என்றார்.
‘தெமாசெக் ஷாப்ஹவுஸ்’ வளாகத்தில் நடைபெற்ற ‘ஹோல்டிங் தி சென்டர்: நெவிகேட்டிங் ஆன்லைன் போலரைசேஷன்’ என்ற பொதுக் கலந்துரையாடல் குழுவின் ஒருவராக அவர் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் மின்னிலக்கத் தளங்களில் இடம்பெறும் ஒரு சார்பு மற்றும் பொய்த்தகவல்கள் குறித்த விவாதங்களில் ஈடுபட்டனர்.
தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகத் திருத்த உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரிகளுக்கு வழிவகை செய்யும் ‘பொஃப்மா’ எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் தேவையான ஒன்று என்று திருமதி சிம் ஆன் சுட்டிக்காட்டினார்.
குழுவின் மற்றொரு உறுப்பினரான ‘பிளாக் டாட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிக்கோலஸ் ஃபாங், சமூக ஊடகப் பயனர்களைத் தங்கள் தளங்களிலேயே தக்கவைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சில வழிமுறைகள் கவனத்தை ஈர்க்கும் அதிரடிப் பதிவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதை சுட்டிக் காட்டினார்.
இந்த அணுகுமுறை பெரும்பாலும் பிரிவினைவாதத்திற்கும் தவறான தகவல்கள் பரவுவதற்கும் வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், சமூக ஊடக நிறுவனங்கள் சிங்கப்பூரில் வணிக ரீதியாகச் செயல்படுவதால், அதிகாரிகள் அவற்றின் மீது கடுமையான போக்கைக் கையாள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலில் ஆண்களின் ஆதிக்கக் கருத்துகளைப் பரப்பும் ‘மேனோஸ்பியர்’ இணையக் குழுக்களுக்கு எதிராக அதிகாரிகள் ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறார்களா என்று பங்கேற்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆய்வுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வாளரான சாதிக் பாஷா, இதுபோன்ற பதிவுகள் அதிகரித்துள்ளதாகவும், இது இளையர்களை வன்முறையை நோக்கி இழுத்துச் செல்லக்கூடும் என்றும் எச்சரித்தார்.
விளையாட்டுகளில் இளையர்கள் தங்களை ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாதிகள் போலப் பாவித்து விளையாடுவதை அவர் உதாரணமாகக் காட்டினார்.
மேலும் ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சிம் ஆன், தீவிரவாதப் போக்கிற்கு ஆளான தனிநபர்களை அடையாளம் காண்பதற்கான கட்டமைப்புகள் தற்போது நடைமுறையில் உள்ளதாகக் கூறினார்.
சமுதாயத்தின் கூட்டு முயற்சியாலும், தீவிரவாதப் போக்கின் அறிகுறிகளைக் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களின் விழிப்புணர்வாலும் இது சாத்தியமாகிறது என்று அவர் மேலும் கூறினார்.

