தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆரம்பநிலையிலேயே மனநோயைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்: கோ போ கூன்

2 mins read
0f555871-2169-4dab-b24f-74bd459ebf6f
சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனநோய் மோசமடைவதற்கு முன்னதாக ஆரம்பநிலையிலேயே அதைத் தடுப்பதற்கான அணுகுமுறைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் இலேசான மனநலப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் உதவி வழங்கத் தேவையான வளங்கள் ஒதுக்கப்படும் என்றார் அவர்.

அவர்கள் தொடர்ந்து நலமுடன் வாழ இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தைப் போலவே இத்திட்டம் நோய்த் தடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது.

“ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின் முக்கிய அம்சமாக நோய்த் தடுப்பு அணுகுமுறை உள்ளது. அத்துடன் இளையர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மனநலம் தொடர்பான திட்டத்துக்கும் இதே அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும்,” என்று டாக்டர் கோ தெரிவித்தார்.

40 வயதும் அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கவும் நாட்பட்ட நோயைத் தவிர்க்கவும் ஆரோக்கியமான வாழ்கைமுறையைக் கடைப்பிடிக்கவும் ஹெல்தியர் எஸ்ஜி ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தின்கீழ், பொதுமக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் முதன்மைப் பராமரிப்பு மருத்துவருடன் இணைந்து தங்களுக்கான பிரத்யேக சுகாதாரத் திட்டங்களை வகுப்பர்.

சிங்கப்பூரின் மனநல சுகாதாரப் பராமரிப்பு முறை பரிவுகள் அடிப்படையிலான அணுகுமுறையில் இயங்குகிறது. அறிகுறிகளின் கடுமையைப் பொறுத்து மொத்தம் நான்கு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் பிரிவில், மனநோய் அறிகுறி அறவே இல்லாதவர்கள் மனநலத் திட்டத்தாலும் அவர்களுடன் இருப்போரின் ஆதரவாலும் பலனடைவர்.

இரண்டாம் பிரிவில், இலேசான மனநோய் அறிகுறிகள் கொண்டவர்கள், ஆலோசனை மற்றும் மனவுளைச்சலை எவ்வாறு சமாளிப்பது என்பதை கற்றுக்கொடுக்கும் திட்டங்களால் பலனடைவர்.

மூன்றாம் பிரிவில், மிதமான மனநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உளவியல் சிகிச்சையும் மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும்.

நான்காம் பிரிவில், மிகக் கடுமையான மனநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மனநல மதிப்பீடு மற்றும் நீண்டகால சிறப்பு உளவியல் திட்டங்கள் தேவைப்படும்.

குறிப்புச் சொற்கள்