சிங்கப்பூரைச் சேர்ந்த ஆறு பேரிடம் தங்கக் கட்டிகள் உட்பட $1.1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்களை ஏமாற்றிய மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய மூவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடியால் பாதிக்கப்பட்ட அறுவரும் 36 முதல் 77 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் நால்வர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
அந்த நால்வரில் ஒவ்வொருவரும் $35,000 முதல் $500,000 வரை இழந்துள்ளனர்.
குற்றவாளிகளில் ஒருவரான ரால்டால்ஃப் கோ யோங் லீ, 31, என்பவருக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) ஆறாண்டு, இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
ரயான் எங் சீ ஹாவ், 26, என்பவருக்கு நான்கு ஆண்டு, 11 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அவர்களின் கூட்டாளியான யங் ராவன், 29, என்பவருக்கு நான்கு ஆண்டு, ஒரு மாதம் சிறைத் தண்டனையும் $700 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த மூன்று சிங்கப்பூர் ஆடவர்களும் குற்றவியல் நடத்தை மூலம் ஆதாயம் அடைந்ததையும் குற்றக்கும்பலில் உறுப்பினராக இருந்ததையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
