நினைவாற்றல் இழப்பால் (டிமென்ஷியா) பாதிக்கப்பட்ட 69 வயது முதியவரைத் தாக்கிச் சித்திரவதை செய்த குற்றத்திற்காக இந்தோனீசியாவைச் சேர்ந்த பணிப்பெண் மரியா இங்க்ரிட் செரானுக்கு நீதிமன்றம் 11 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
69 வயதான மூதாட்டியைப் பராமரிப்பதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியமர்த்தப்பட்ட 34 வயதான மரியா, அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவிக் காட்சிகளின் மூலம் குற்றவாளி எனச் சுட்டிக்காட்டப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மூதாட்டிக்குக் காலை உணவு ஊட்ட முயன்றபோது சினமுற்ற பணிப்பெண் மரியா அவரது தலையிலும் முகத்திலும் கடுமையாக அறைந்தார். மேலும், மூதாட்டியின் விரல்களைத் திருகியும் மூக்கில் தாக்கியும் கொடூரமாக நடந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவரின் மகன்கள் கண்காணிப்புப் படக்கருவிக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
உடனடியாகக் காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மரியா கைது செய்யப்பட்டார். முதியவர் நச்சரிப்பதைக் கட்டுப்படுத்தவே தான் இவ்வாறு தாக்கியதாக விசாரணையில் மரியா ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர் தனது உடல்நிலை காரணமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ புகார் அளிக்கவோ முடியாத சூழலில் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் குறிப்பிட்டார்.


