காதலன் என நம்பி அவரது சார்பில் பணத்தைப் பெற்றுக்கொள்ள உதவிய 70 வயது மாதுக்கு பத்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏறக்குறைய 38,000 வெள்ளியைப் பெற்று அவர் காதலனின் கணக்குக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையில் குறைந்தது 2,000 வெள்ளி காதல் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைத்த பணம் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
கிறிஸ்டினா சியோங் யோக் லின் என்ற அந்த மாது, பணம் எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் அதைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
செப்டம்பர் 2024ல் இன்ஸ்டகிராமில் சந்தித்த லியாம் என்பவருக்காக அவரது சார்பில் பணத்தைப் பெற்று அவர் கூறிய கணக்குக்கு கிறிஸ்டினா மாற்றியுள்ளார்.
லியாம் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், டெலிகிராம் செயலி வழியாக தினமும் கிறிஸ்டினாவுடன் உரையாடினார். அன்பாகவும் அக்கறையாகவும் பேசிய அவர், கிறிஸ்டினாவுடன் வாழ்வதற்காகச் சிங்கப்பூர் வர விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
இதனால் லியாம்மை தனது உண்மையான காதலன் என கிறிஸ்டினா நம்பினார்.
டிசம்பர் 11 முதல் டிசம்பர் 16, 2024 வரை கிறிஸ்டினா தனது வங்கிக் கணக்கில் ஏழு பரிவர்த்தனைகள் மூலம் 38,100 வெள்ளியைப் பெற்று, அந்தப் பணத்தை மற்ற கணக்குகளுக்கு மாற்றினார். அனைத்துப் பணமும் மோசடி மூலம் பெற்ற பணமாகும்.
இதையடுத்து டிசம்பர் 2024 பிற்பகுதியில் கிறிஸ்டினாவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.
பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்துத் தெரியாமல் அதைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிறிஸ்டினாவுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, 50,000 வெள்ளி வரை அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டிருக்கலாம்.

