சிங்கப்பூரில் கேபோட் எனும் மின்சிகரெட்டுகளைக் கடத்திய குற்றத்திற்காக 41 வயது டெரெக் கோர் பூன் என்ற ஆடவருக்கு மூவாண்டுகள், 10 மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் எட்டோமிடேட், கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருளாக வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கேபோட் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் ஆடவர் கோர்.
தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளைக் கோர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
எட்டோமிடேட்டை வைத்திருந்தது, போதைப் பொருள் உட்கொண்டது, போதைப் பொருள் கடத்தல், வாகனம் ஓட்டும் தகுதியை இழந்திருந்தபோதும் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றங்களும் கோர்மீது சுமத்தப்பட்டிருந்தன.
வாகனம் ஓட்டுவதற்கான தடையை எதிர்கொண்ட கோர், கேபோட் கருவிகளை விநியோகம் செய்தபோது பிடிபட்டார்.
சிறைத்தண்டனைக் காலம் முடிந்த பிறகு 20 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டக் கோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட பிறகு வாகனம் ஓட்டியதற்காகக் கோர் பிடிபடுவது இது மூன்றாவது முறை.
2016ஆம் ஆண்டு மெத்தம்ஃபெட்டமின் உட்கொண்டது உள்ளிட்ட பிற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட கோர், கடந்த ஆண்டிலிருந்து எட்டோமிடேட் கலந்து மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
அதன் பிறகு, வெவ்வேறு டெலிகிராம் குழுக்களில் இணைந்து கேபோட் விநியோக வர்த்தகத்தை மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள புளோக் 631ன் கார் நிறுத்துமிடத்தில் அந்த வழியே சென்ற ஒருவர், தடுமாறிய நிலையில் கோர் நடந்துகொண்டிருந்ததைக் கண்டார்.
அதையடுத்துக் காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கோரின் காரில் 43 கேபோட் கருவிகளும் எட்டு மின்சிகரெட் கருவிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
