‘கேபோட்’ பயன்படுத்தி விபத்துக்குள்ளான கார் ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை

‘கேபோட்’ பயன்படுத்தி விபத்துக்குள்ளான கார் ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை

2 mins read
3f3db33f-4c76-437b-9fc0-f34caae4d3a8
‘எட்டோமிடேட்’ கலந்த மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 வயது இங் பிங் ஹொங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், ‘சி’ பிரிவு போதைப் பொருளாக ‘எட்டோமிடேட்’ வகைப்படுத்தப்பட்டதை அடுத்து அதை உட்கொண்டு காரை ஓட்டி விபத்துக்குள்ளானதை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி நேர்ந்த அந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.

சம்பவம் தொடர்பில் கைதான 37 வயது இங் பிங் ஹொங்கிற்குத் திங்கட்கிழமை (ஜூன் 29) ஓராண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எட்டோமிடேட் உட்கொண்டு கார் ஓட்டியது, எட்டோமிடேட் கலந்த இரண்டு மின்சிகரெட் ‘போட்’ கருவிகளை வைத்திருந்தது, ஆபத்தான முறையில் காரை ஓட்டி மற்றொரு கார்மீது மோதியது ஆகிய குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆபத்தான முறையில் காரை ஓட்டியதற்காக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபின் அனைத்துப் பிரிவிலும் உள்ள ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதற்கும் பெறுவதற்குமான நான்கு ஆண்டு தடையை இங் எதிர்நோக்குகிறார்.

காரைக் கொண்டு மோதிய மற்றொரு வாகனவோட்டிக்கு $490.50 இழப்பீடும் வழங்கும்படி இங்கிற்கு உத்தரவிடப்பட்டது. அவ்வாறு செய்யாவிட்டால் அவர் இரண்டு நாள்களுக்குக் கூடுதலாக சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

நச்சு சட்டத்தின்கீழ் இதற்குமுன் வகைப்படுத்தப்பட்ட எட்டோமிடேட் போதைப் பொருளையோ எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளையோ வைத்திருப்போருக்கு அதிகபட்சம் ஈராண்டுவரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி போதைப் பொருள் சட்டத்தின்கீழ் எட்டோமிடேட் ‘சி’ பிரிவு போதைப் பொருளாக வகைப்படுத்தப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

எனவே, எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை வைத்திருப்போருக்குத் தற்போது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

அறிமுகம் இல்லாத இணைய விற்பனையாளரிடமிருந்து எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை இங் $80க்கு வாங்கிப் பயன்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி இரவு 9 மணியளவில் சிறிது நேரத்துக்குச் சுயநினைவை இழந்த இங், போக்குவரத்தின் எதிர்திசையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளானார்.

குறிப்புச் சொற்கள்