சிங்கப்பூர்ச் சிறைச் சேவைகள் வாகனமும் இரண்டு தனியார் வாகனங்களும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) விபத்துக்குள்ளானதில் சிறைக் கைதியும் அவருடன் சென்ற இரண்டு அதிகாரிகளும் காயமடைந்தனர்.
ஜாலான் பஹாகியாவுக்கு அடுத்து உள்ள சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் விபத்து நேர்ந்ததாகச் சிங்கப்பூர்ச் சிறைச் சேவை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
டான் டோக் செங் மருத்துவமனையில் சிறைக் கைதியின் மருத்துவச் பரிசோதனை முடிந்து மீண்டும் செலாராங் பார்க் சிறைச்சாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது சிறைச்சாலை வாகனத்தின் பின்புறத்தில் தனியார் வாகனம் ஒன்று மோதியது.
அதன் விளைவாகச் சிறைச்சாலை வாகனம் முன்னிருந்த மற்றொரு வாகனத்தின் பின்புறத்தில் மோதியது.
சிறைக் கைதியும் அவருடன் இருந்த அதிகாரி ஒருவரும் சிறைச்சாலை வாகனத்தின் பின் இருக்கைகளில் சிக்கிக்கொண்டனர். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்புக் கருவிகளைக் கொண்டு அவர்களை வெளியே கொண்டுவந்தனர்.
சிங்கப்பூர்ச் சிறைச் சேவை அதிகாரிகளும் சிறைக் கைதியும் சாங்கிப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்குச் சிகிச்சை முடிந்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்.
சிறைக் கைதியுடன் சென்ற இரண்டு அதிகாரிகளுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர்ச் சிறைச் சேவை காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் உதவிவருகிறது.

