இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய சிங்கப்பூர் குற்றவாளிக்குச் சிறை

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய சிங்கப்பூர் குற்றவாளிக்குச் சிறை

2 mins read
8a91048e-9b7d-4f8e-b434-2ab326ffe9ab
சாங்கி விமான நிலையம் வாயிலாக போலி பெயருடன் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது ஆடவர் கைது செய்யப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சிங்கப்பூரர் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) 14 மாதம், மூன்று வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டான் கீ வீ எனப்படும் அந்த 58 வயது ஆடவருக்கு, குடிநுழைவுச் சட்டத்தை மீறியதற்காக அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே சட்ட மீறலுக்காக அவர் மீது சுமத்தப்பட்ட இதர 16 குற்றச்சாட்டுகள், தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

முன்னதாக, 2002 ஆகஸ்ட் மாதம் மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட டானுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அப்போது, தம் மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த டான், சிறைத் தண்டனை அனுபவிப்பதைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து தப்பி ஓடினார்.

2002 ஆகஸ்டுக்கும் 2003 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், அவர் மீன்பிடிப் படகு மூலம் சட்டவிரோதமாகச் சிங்கப்பூரை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது.

அதன் பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பதில் மர்மம் நிலவி வந்த வேளையில் இவ்வாண்டு மார்ச் 7ஆம் தேதி ‘கென் ஸ்ரோனா’ என்ற பெயரில் இந்தோனீசியக் கடப்பிதழைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது சாங்கி விமான நிலையத்தில் டான் கைது செய்யப்பட்டார்.

இந்த விவரங்களை சிங்கப்பூர் காவல்துறையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

விமான நிலையத்தின் தானியங்கிப் பாதையில் அவரால் குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ய இயலாததைக் கண்ட அதிகாரிகள் டானிடம் விசாரணை நடத்திய பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

காவல்துறையால் நீண்டகாலம் தேடப்பட்டு வந்தவர் என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் டானை காவல்துறையிடம் குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

குறிப்புச் சொற்கள்