மரண தண்டனை விதிக்கப்பட்ட 13 கைதிகளுக்குச் சொந்தமான கடிதங்களின் பரிமாற்றம் தொடர்பில், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகமும் சிறைத்துறையும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டதாகவும், நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகவும் மேல் முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மூத்த நீதிபதி ஜூடித் பிரகாஷ், நீதிபதி ஸ்டீவன் சோங் ஆகியோர் நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றனர். தனது கடிதத் தொடர்பு, உரிமை ஆகியவற்றின் தொடர்பில் சிறைக்கைதிக்கு உள்ள உரிமையின் முக்கியத்துவத்தை அவர்கள் மறுவுறுதிப்படுத்தினர்.
சிறைக்கைதித் தொடர்புகளின் ரகசியத்தன்மையும் தனியுரிமையையும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
உள்துறை அமைச்சின்கீழ் இயங்கும் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகமும் சிறைத்துறையும் நிலைமையைச் சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 13 கைதிகள், சட்டவிரோதச் செயல்முறை, நம்பிக்கை மோசடி, காப்புரிமை அத்துமீறல் ஆகியவற்றுக்கு இழப்பீடு கோரி கடிதங்கள் எழுதினர்.
அவர்கள் 2021ஆம் ஆண்டு ஜூலையில் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தனர்.
அந்தக் கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்களில் முன்னாள் காவல்துறை அதிகாரி இஸ்கந்தர் ரஹ்மத்தும் அடங்குவார். 2013ஆம் ஆண்டில் கோவனில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அந்தச் சிறைக்கைதிகள் சிங்கப்பூர் காவல்துறை, தங்களின் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினருக்குக் கடிதங்கள் அனுப்பியிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் வழக்கறிஞர்களுக்கு எதிரான புகார்கள், சட்ட உதவிக்கான கோரிக்கைகள் உள்ளிட்டவைப் பற்றி அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்தக் கடிதங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்ட நேரத்தில், சிறைத்துறையும் உள்துறை அமைச்சும் பொதுவாக அரசாங்கத்தின் சட்டபூர்வ ஆலோசகரான தலைமைச் சட்ட அலுவலகத்திடம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் என்று அரசாங்கத் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி தாய் வெய் ஷியோங் கூறினார்.
“அத்தகைய விவகாரங்களைக் கையாளும் சிறைத்துறை, உள்துறை அமைச்சு அதிகாரிகள் சட்டரீதியாகப் பயிற்சி பெறாததால், சட்டம் தொடர்பான எந்தவோர் ஆவணத்தையும் அவர்கள் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திடம் அனுப்புவார்கள்,” என்று அவர் கூறினார்.
இதே காரணத்திற்காக கிட்டத்தட்ட அனைத்து 68 ஆவணங்களையும் சிறைத்துறை அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திடம் கொடுத்ததை நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இருப்பினும், கடிதங்களை நகல் எடுத்து அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் உள்ளிட்ட யாரிடமும் அவற்றைக் கொடுப்பதற்கு சிறைத்துறைக்கு அனுமதி இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

