‘தலைமுறைகளுக்கு இடையிலான குற்றச்செயல் அபாயத்தைத் தடுப்பதில் சிறைச்சாலை கவனம் செலுத்தவேண்டும்’

‘தலைமுறைகளுக்கு இடையிலான குற்றச்செயல் அபாயத்தைத் தடுப்பதில் சிறைச்சாலை கவனம் செலுத்தவேண்டும்’

2 mins read
அனைத்துலகக் கருத்தரங்கில் அமைச்சர் ஜோசஃபின் டியோ
d0b5d94b-1327-4d9b-befe-3d90cff1751a
உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ, செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகச் சீர்திருத்த நிலையங்கள், சிறைச்சாலைகள் சங்கத்தின் வருடாந்தரக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குற்றச்செயல்களில் ஈடுபடும் போக்கு தலைமுறைகளுக்கு இடையே தொடரும் அபாயத்தைக் குறைக்க, சிறைக்கைதிகளுக்கும் அவர்களின் குடும்பத்தார்க்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்படவிருக்கிறது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு இடையே குற்றச்செயலில் ஈடுபடும் விகிதம் மிக அதிகமாக இருப்பது அண்மைய ஆய்வுகளில் தெரியவந்ததை அடுத்து இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூர்ச் சிறைச் சேவை 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட பெற்றோரின் பிள்ளைகளில் 22 விழுக்காட்டினர் குற்றச்செயல்களைப் புரிந்தது தெரியவந்தது.

உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ இதைத் தெரிவித்தார்.

செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகச் சீர்திருத்த நிலையங்கள், சிறைச்சாலைகள் சங்கத்தின் வருடாந்தரக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2020ஆம் ஆண்டு நடத்திய மற்றோர் ஆய்வில் கவலைக்குரிய இத்தகைய அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றார் அமைச்சர்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், குற்றச்செயல்களில் ஈடுபட்டோரின் பிள்ளைகள் வருங்காலத்தில் குற்றவாளிகள் ஆவதற்கான வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரியவந்ததாக கூறினார்.

அமைச்சும் தேசிய சமூக சேவை மன்றமும் இணைந்து நடத்திய அந்த ஆய்வில் பெற்றோர் 94,000 பேரும் அவர்களின் பிள்ளைகள் ஏறக்குறைய 183,000 பேரும் பங்குகொண்டனர்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட தந்தையரின் பிள்ளைகள் குற்றவாளிகளாகும் விகிதம் 2.7 மடங்கு அதிகம். தாய் குற்றவாளி என்றால் அவரின் பிள்ளைகள் குற்றச்செயலில் ஈடுபடும் சாத்தியம் 3.7 மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அமைச்சர் டியோ தமது உரையில், குற்றவாளிகளைச் சீர்திருத்தும் சிங்கப்பூரின் அணுகுமுறை சிறைத்தண்டனைக்கு அப்பாற்பட்டது என்று கூறினார்.

சீர்திருத்தம், முன்னாள் குற்றவாளிகளைச் சமூகத்துடன் மீண்டும் இணைத்தல், அவர்கள் குற்றப்பாதையில் மீண்டும் செல்லும் அபாயத்தைக் குறைத்தல் போன்ற முயற்சிகள் சிங்கப்பூரின் அணுகுமுறையில் அடங்கும் என்று திருவாட்டி டியோ சொன்னார்.

கைதிகளுக்குத் திறன் பயிற்சிக்கான வாய்ப்புகள், வேலை ஆதரவு, குடும்பத்தினருக்கு சமூக ஆதரவும் நிதி உதவியும் போன்ற முயற்சிகள் பலனளிப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்