பிரித்தம் சிங் மேல்முறையீடு: டிசம்பர் 4ல் தீர்ப்பு

2 mins read
b3dd2cde-fdfd-449e-af12-ff7247a78324
பாட்டாளிக் கட்சித் தலைவரும் சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கின் மேல்முறையீட்டு வழக்குக்கான தீர்ப்பு வரும் வியாழக்கிழமை, டிசம்பர் நான்காம் தேதி வழங்கப்படும்.

நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதாகத் தம் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சிங் மேல்முறையீடு செய்திருந்தார்.

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவருமான சிங்கின் மேல்முறையீடு குறித்த நீதிமன்ற விசாரணை நவம்பர் நான்காம் தேதி நடந்தது. சிங், நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டின் தொடர்பில் நீதிபதி தீர்ப்பளிக்கும்போது அவர் முக்கியமான ஆதாரங்களைக் கருத்தில்கொள்ளவில்லை என்பது அவரைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களின் வாதம்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சிங், இவ்வழக்கில் குற்றம் புரிந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் உண்மையை மறைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு அறிவுரை வழங்கியதில் தமது பங்கு குறித்து சிங், நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காக அவருக்கு மொத்தம் 14,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத் துணை நீதிபதி லியுக் டான், பொய்த்தகவல் குறித்து சிங் வேண்டுமென்றே நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்ததாகத் தீர்ப்பளித்தார். திருவாட்டி கான், தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்டு நிலைமையைச் சரிசெய்ய வைக்க ஊக்குவிக்கும் எண்ணம் சிங்கிடம் இல்லை என்பதற்கும் கானைத் தொடர்ந்து பொய் சொல்ல வைத்ததில் சிங் நேரடியாக ஈடுபட்டதற்கும் ஆதாரம் இருந்ததாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

சிங்கின் மேல்முறையீட்டு மனு குறித்து நீதிபதி ஸ்டீவன் சோங்கின் முன்னிலையில் உச்ச நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, சிங்கின் வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜும்மாபோய், திருவாட்டி கானின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சிங் உள்ளிட்ட பாட்டாளிக் கட்சித் தலைவர்களுக்கும் தனக்கும் நடந்த சந்திப்பு குறித்து திருவாட்டி கான் முரணான தகவல்களை வெளியிட்டதாக திரு ஜும்மாபோய் வாதிட்டார்.

திருவாட்டி கான், முன்னாள் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராவார்.

குறிப்புச் சொற்கள்